பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15: பெட்டாலிங் ஜெயா மாநகரின் அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் நோக்கில், 'பெட்டாலிங் ஜெயா உள்ளூர் திட்டம் (மாற்று) 2026–2035' எனும் புதிய வரைவுத் திட்டத்தை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) தற்போது தயாரித்து வருகிறது. இத்திட்டம் மாநகரின் கட்டமைப்பு வளர்ச்சி, பொருளாதார மேன்மை மற்றும் போக்குவரத்து அமைப்புகளுக்கான முதன்மை வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்த ஆவணம் வெறும் நிலப் பயன்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், இது மாநகரின் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான எதிர்கால இலக்குகளைக் கொண்டிருக்கும் என்றும் பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சாமிங்கோன் விவரித்தார்.
அதில் குறிப்பாக, இந்தத் திட்டத்தைத் தயாரிப்பதில் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதில் சுவாரஸ்யமான அம்சமாகப், 'பெட்டாலிங் ஜெயா சிறுவர் மன்ற' உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைகளும் யோசனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மற்றும் மலேசியத் திட்டமிடுபவர்கள் நிறுவனம் (MIP) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சமூக நலன், நகர்ப்புற போக்குவரத்து, நிலையான சுற்றுச்சூழல், சமூகப் பாதுகாப்பு, பொது இடங்களின் மேம்பாடு மற்றும் நகர்ப்புறப் பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 22 மூலோபாயச் செயல் திட்டங்களை மாநகராட்சி ஏற்கனவே கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க முகமைகள், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் உள்ளூர் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினருடனும் நடத்தப்படும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்ப்புறத் திட்டமிடலும் அந்தந்தப் பகுதி மக்களின் உண்மையான அபிலாஷைகளையும் தேவைகளையும் பிரதிபலிப்பதை உறுதி செய்ய முடியும் என்று மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி மேலும் உறுதியளித்தார்.









