கோலாலம்பூர், மார்ச் 25 - உலகளாவிய வெப்பநிலை இந்த ஆண்டில் மீண்டும் ஒரு புதிய உச்சத்தைப் பதிவு செய்யக்கூடும் என வானிலை மற்றும் பருவநிலை மாற்ற நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எல் நினோ எனப்படும் இயற்கையான வானிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலின் தொடர்ச்சியான தாக்கங்கள் காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய பிரபல பருவநிலை மாற்ற நிபுணர் பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் ஃப்ரெடோலின் தங்காங், எல் நினோ நிகழ்வானது உலக வெப்பநிலையைத் தீவிரமாக உயர்த்தும் வல்லமை கொண்டது எனச் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக 2024-ஆம் ஆண்டு, 1.55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுடன் உலகின் வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து 2025-இல் லா நினா (La Nina) தாக்கத்தால் வெப்பநிலை சற்றே குறைந்திருந்தாலும், அதுவும் வரலாற்றின் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாகவே பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் பருவநிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவல்படி, எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதவாக்கில் எல் நினோ மீண்டும் தொடங்கி, ஆண்டின் இறுதியில் உச்சத்தை எட்டும் என்றும், இது 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதாகவும், ஆண்டின் இறுதியில் இது 80 முதல் 90 விழுக்காடாக உயரும் என்றும் டாக்டர் ஃப்ரெடோலின் தெரிவித்தார்.
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் கடல் மட்ட வெப்பநிலையை உயர்த்துவதே இந்த எல் நினோவிற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கம் வரை இது மிக வலுவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நீண்டகால வறட்சி, காடுகளில் தீ விபத்து மற்றும் புகைமூட்டம் (Haze) போன்ற அபாயங்களை எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.








