ஷா ஆலம், மார்ச் 24 – நாட்டில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பமான வானிலை காரணமாக, பொதுமக்கள் 'வெப்பத் தாக்குதல்' எனப்படும் ஸ்டுரோக் ஹாபா (Stroke Haba) அபாயம் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுப்புற வெப்பநிலையின் அதிகரிப்பு மனித ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் வெயிலில் கடினமாக உழைப்பவர்கள் இந்த வெப்பத் தாக்குதலால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிழலான இடங்களைத் தேர்ந்தெடுப்பதோடு, உடலில் நீர்ச்சத்தை நிலைநிறுத்த போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மிகவும் முக்கியமாக, குழந்தைகளைக் காரின் உள்ளே தனியாக விட்டுச் செல்வது ஒருபோதும் செய்யக்கூடாத காரியம் என்றும், ஒரு சில நிமிடங்கள் என்றாலும் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கடுமையான வெப்பம் தொடர்பான 15 சம்பவங்கள்பதிவாகியுள்ளன. இதில் ஒரு சிறுவனின் உயிர் பிரிந்த துயரச் சம்பவமும் அடங்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
வெப்பத் தாக்குதல் என்பது திடீரென்று ஏற்படுவதில்லை; மாறாக நீடித்த தலைவலி, தாள முடியாத தாகம் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற ஆரம்பக்கால அறிகுறிகளை அது வெளிப்படுத்தும்.
எனவே, உச்சி வெயில் காலங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, மெல்லிய ஆடைகளை அணிவது மற்றும் உடற்பயிற்சிகளை காலை அல்லது இரவு நேரங்களுக்கு மாற்றுவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முறையான நீர் அருந்துதலும், உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் மட்டுமே சிறந்த வழி என்றும் அவர் மீண்டும் நினைவூட்டினார்.







