இஸ்தான்புல், மார்ச் 25 - மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களைத் தணிப்பதற்கான புதிய தூதரக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக 'அனடோலு அஜான்சி' (Anadolu Ajansi) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டாலராகச் சரிந்துள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 98.2 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
பிராந்தியத்தில் நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தவும், எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்கவும் புதிய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்கா ஒரு போர் நிறுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் வாஷிங்டன் 15 அம்சங்கள் கொண்ட ஒரு புதிய முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' (The New York Times) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய ஆக்கபூர்வமான நகர்வுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தங்களுக்குப் பங்கில்லை என்று ஈரான் மறுப்புத் தெரிவித்திருந்தது. அத்துடன், ஹார்முஸ் நீரிணையில் முடங்கியுள்ள கப்பல் போக்குவரத்தைச் சீர் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என ஈரான் தெரிவித்ததைத் தொடர்ந்து எண்ணெய் விலை அதிகரித்திருந்தது.
இருப்பினும், தற்போது நிலவும் புதிய தூதரக முயற்சிகளால் விலை மீண்டும் குறையத் தொடங்கியிருப்பது உலகப் பொருளாதாரத்தில் ஒரு சிறு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.








