கோலாலம்பூர், மார்ச் 25 - மத்திய கிழக்கு ஆசியாவில் நீடித்து வரும் போர்ச் சூழல், மலேசியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவிலான தயார்நிலை நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (MKN) சிறப்புக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த நான்கு வாரங்களாகத் தொடர்ந்து வரும் இப்பிரச்சனையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டிருப்பதை மலேசியா வரவேற்றுள்ளது.
இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், நேர்மையான மற்றும் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று மலேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய சாதகமான நகர்வுகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில், இருப்பினும் நீண்டகால மோதல்களால் ஏற்படக்கூடிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நாடு தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பொருளாதார ரீதியிலான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று தேசிய பொருளாதார நடவடிக்கை குழுவின் (MTEN) சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சர்வதேச அளவில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் நியூசிலாந்து, ஜப்பான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றனர்.
அனைத்துத் தரப்பினருடனும் சுமுகமான உறவைப் பேணி வரும் மலேசியாவின் தந்திரோபாய நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, அந்நிய நாடுகளின் உளவு நடவடிக்கைகள், எரிபொருள் கடத்தலைத் தடுத்தல் மற்றும் தற்போது லெபனானில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசியப் பாதுகாப்புப் படையினரின் (MALBATT) பாதுகாப்பு நிலை குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சவாலான உலகளாவிய சூழலிலும் நாட்டின் இறையாண்மையையும் மக்களின் நலனையும் காக்க அரசாங்கம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.








