கோலாலம்பூர், மார்ச் 24 – ஈரான் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதோடு, சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையும் மலேசியா முற்றாக நிராகரிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் (Christopher Luxon) மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்தப் போர்ப் பதற்றத்தை தணிக்க உடனடி போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
இந்த உரையாடலின் போது, ஈரான்-இஸ்ரேல் மோதலினால் நியூசிலாந்தின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.
அதே வேளையில், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்தவும் நியூசிலாந்து மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைப் பிரதமர் அன்வார் வரவேற்றார்.
மலேசியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகளை 'மூலோபாயக் கூட்டாண்மை' (Strategic Partnership) கட்டமைப்பின் கீழ் மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இணக்கம் காணப்பட்டது. தற்போதைய உலகளாவிய சவால்களை இரு நாடுகளின் நலனுக்காக ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருக்கப்போவதாகவும் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








