ஷா ஆலம், மார்ச் 20 – மலேசியாவில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் தங்களது புனிதப் பெருநாளான ஹரி ராயா ஐடில்பித்ரியை நாளை மார்ச் 21 சனிக்கிழமை அன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்ட மாட்சிமை தங்கிய மன்னர்களின் முத்திரைக்காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அகமட், மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு இணங்க இந்தத் தேதி உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் நோன்புப் பெருநாள் நாளை தொடங்கும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதிப்படுத்தினார்.








