புத்ராஜெயா, மார்ச் 6 – தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தின் (NSRC) பங்கு மற்றும் மோசடிக்கு ஆளானால் உடனடியாகச் செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்த மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளதாக, மடாணி அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சைபர்ஜெயாவில் உள்ள NSRC-க்குப் பிரதமர் மேற்கொண்ட வருகையைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் அன்வார் இவ்விஷயத்தை எழுப்பியதாகத் தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாஹ்மி கூறினார்.
மோசடிக்கு ஆளானவர்களின் கணக்குகளிலிருந்து பல்வேறு கையாள் கணக்குகள் (mule accounts) மூலம் பணம் வெளியேறும் வழியைக் கண்காணிக்கும் NSRC அமைப்பை ஆய்வு செய்த பிரதமர், அந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்த பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டார்.
"NSRC குறித்து மலேசியர்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முதலாவதாக, அந்த மையம் பற்றியும், நாம் பாதிக்கப்பட்டால், திருடப்பட்ட பணத்தைக் காப்பாற்ற விரைவான நடவடிக்கையை எப்படி எடுக்கலாம் என்பதையும்," அவர் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மோசடி தொடர்பான இரண்டு வழக்குகளைப் பகிர்ந்துகொண்டதாகவும், அவை NSRC-க்கு உடனடியாகப் புகாரளிப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
முதல் வழக்கில், ஒரு தனிநபர் தனது RM1 மில்லியன் சேமிப்பிலிருந்து RM800,000-க்கும் மேல் இழந்தார். பிற்பகல் 2 மணியளவில் பணம் காணாமல்போகத் தொடங்கிய நிலையில், இரவு 10 மணியளவில், அதாவது சுமார் எட்டு மணி நேரம் தாமதமாகப் புகார் அளித்ததால், திருடப்பட்ட தொகையில் சுமார் RM170,000 மட்டுமே NSRC-ஆல் மீட்க முடிந்தது.
மற்றொரு வழக்கில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையை உணர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர் உடனடியாக NSRC-ஐத் தொடர்பு கொண்டதால், அவரின் பணத்தின் பெரும் பகுதி வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
மோசடிக்கு ஆளானவர்கள் 997 என்ற எண்ணை அழைத்து உடனடியாகச் செயல்பட, NSRC குறித்து பொதுமக்களிடையே செய்திகளைப் பரப்ப ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
NSRC செயல்பாடுகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் தனியாகக் காவல் நிலையத்தில் புகார் செய்யத் தேவையில்லை. ஏனெனில், அந்த மையத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அழைப்புகளை ஏற்று, புகார் பதிவு செயல்முறைக்கு உதவத் தயாராக உள்ளனர்.
கணக்குகளை முடக்குவது மற்றும் பணப் பரிமாற்றத்தைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த, வர்த்தக வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு ஏஜென்சிகளின் ஒத்துழைப்பையும் NSRC உள்ளடக்கியுள்ளது.
"இது நிச்சயமாக மக்களின் பணத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரு முயற்சியாகும்," என்று அவர் கூறினார்.
வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும் NSRC, தேசிய பதிலளிப்பு மையமாக முழுமையாகச் செயல்படுவதன் மூலம், இணையவழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் மடாணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்குச் சான்றாக உள்ளது.
தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்
6 மார்ச் 2026, 8:38 AM
தொடர்புடைய செய்திகள்
national
ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாள்: 50% டோல் கட்டணத் தள்ளுபடி
Shalini Rajamogun
18 மார்ச் 2026

national
ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
Shalini Rajamogun
15 மார்ச் 2026

national
RON95 விலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் முயற்சி
Shalini Rajamogun
9 மார்ச் 2026

national
மலேசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதுகாப்பாக உள்ளது
Shalini Rajamogun
6 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




