உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, ஈரான் அதன் எண்ணெயை விற்க, அதற்கு 30 நாள் அனுமதியை அமெரிக்கா அளித்துள்ளது

21 மார்ச் 2026, 9:08 AM
உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்த,  ஈரான் அதன் எண்ணெயை விற்க, அதற்கு 30 நாள்  அனுமதியை அமெரிக்கா அளித்துள்ளது

.வாஷிங்டன், மார்ச் 20 — அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் காரணமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலையைத் தணிக்கும் முயற்சியாக, டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை ஈரான் எண்ணெயை கடல்  வழி  விற்பதற்கான  தடைகளை 30 நாட்களுக்கு நீக்கியுள்ளதாக எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க பொருளாதார அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

இந்த அனுமதி உலக சந்தையில் சுமார் 14 கோடி பீப்பாய் எண்ணெயை கொண்டு வரும். இது எரிசக்தி விநியோக அழுத்தத்தைத் தணிக்க உதவும். இந்த நடவடிக்கை, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை அமெரிக்க வணிகங்கள் மற்றும் நுகர்வோரை பாதிக்கும் என்ற வெள்ளை மாளிகையின் கவலையை பிரதிபலிக்கிறது.

நவம்பர் மத்திய தேர்தலுக்கு முன்னதாக, அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

ஈரான் போரின்போது மூன்றாவது தடை விலக்கு

சந்தை நேரத்திற்குப் பிறகு அமெரிக்கா பொருளாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் உரிமம், ஈரான் எண்ணெயை விற்பனை அல்லது விநியோகத்தை முடிக்கத் தேவையானால் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது.

1979 புரட்சிக்குப் பிறகு வாஷிங்டன் தடைகளை விதித்ததிலிருந்து அமெரிக்கா ஈரான் எண்ணெயை அர்த்தமுள்ள வகையில் இறக்குமதி செய்யவில்லை. இந்த அனுமதியால் ஏதேனும் ஈரான் எண்ணெய் அமெரிக்காவுக்குச் செல்லுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கியூபா, வட கொரியா மற்றும் கிரிமியா ஆகிய பகுதிகள் இந்த உரிமத்திலிருந்து விலக்கப் பட்டுள்ளன. இந்த உரிமம் ஏப்ரல் 19 வரை அமலில் இருக்கும்.இந்த நடவடிக்கை ஈரான் எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவரான சீனாவுக்கு பலன் அளிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.

விநியோகங்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் ஆசியாவைச் சென்றடையும். அடுத்த ஒன்றரை மாதங்களில் சுத்திகரிக்கப் பட்டு சந்தையை அடையும். இது அமெரிக்க எதிரிகளின் எண்ணெய்க்கான தடைகளை தற்காலிகமாக நீக்கும் மூன்றாவது முறையாகும்.

இந்த நடவடிக்கைகள் 2022-க்குப் பிறகு உயர்ந்துள்ள எண்ணெய் விலையை (ஒரு பீப்பாய் அமெரிக்க டாலர் 100-க்கு மேல்) கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பகுதியாகும்.அமெரிக்கா முன்பு ரஷ்ய எண்ணெய்க்கான தடைகளைத் தளர்த்தியது.  வெள்ளி கிழமைக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனைக்கு பொதுவான உரிமம் வழங்கியது.

“அடிப்படையில், நாம் ஈரான் எண்ணை  பீப்பாய்களை தெஹ்ரானுக்கு எதிராக பயன்படுத்தி விலையை குறைக்கிறோம். இது ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’யைத் தொடர்ந்து செய்யப்படுகிறது,” என்று பெசென்ட் கூறினார்.

வியாழக்கிழமை ஃபாக்ஸ் பிசினஸ் நேர்காணலில் அவர் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே சுட்டிக் காட்டினார். தடை விதிக்கப்பட்ட ஈரான் எண்ணெயை உலக விநியோகத்தில் விடுவிப்பது எண்ணெய் விலையை 10 முதல் 14 நாட்கள் வரை குறைக்க உதவும் என்றார்.

வெள்ளிக்கிழமை பெசென்ட் மேலும் தெரிவித்தார்: இந்த நடவடிக்கையால் உருவாகும் வருவாயை ஈரான் அணுகுவது கடினம். வாஷிங்டன் ஈரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தைத் தொடரும். சர்வதேச நிதி அமைப்பை அணுகும் திறனையும் தடுக்கும்.

‘விருப்பங்கள் தீர்ந்து வருகின்றன’

அமெரிக்கா-இஸ்ரேல் பிப்ரவரி 28 அன்று தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் கொண்ட வளைகுடா நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தியது.ஈரான் மற்றும் அண்டை வளைகுடா நாடுகளின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப் பட்டுள்ளன. ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இது உலக எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 20 சதவீதத்தை கொண்டு செல்லும் வழியாகும்.

புதன்கிழமை, எண்ணெய் விலையை தணிக்கும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் ஜோன்ஸ் சட்டத்துக்கு 60 நாள் விலக்கு அளித்தது. இது வெளி நாட்டுக் கொடி கொண்ட கப்பல்களை அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே எரிபொருள், உரம் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்ல தற்காலிகமாக அனுமதிக்கிறது.

எரிசக்தி ஆய்வாளர்கள் உட்பட ஆப்சிடியன் ரிஸ்க் அட்வைசர்ஸ் முதன்மை அதிகாரி பிரெண்ட் எரிக்சன் தெரிவித்தார்: நீரிணை கப்பல்களுக்கு திறக்கப்படும் வரை விலை கட்டுப்பாட்டு முயற்சிகள் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தாது.“தடைகளைத் தளர்த்துவது வாஷிங்டனின் பொருளாதாரக் கருவிகள் விரைவில் தீர்ந்து வருவதைப் பற்றிய கவலையை எழுப்புகிறது.

நாம் போரிடும் நாட்டின் தடைகளைத் தளர்த்தும் அளவுக்கு வந்திருந்தால், உண்மையில் விருப்பங்கள் தீர்ந்து வருகின்றன,” என்றார்.மார்ச் 5 அன்று 30 நாள் உரிமத்துக்கு பிறகு, கடலில் சிக்கிய ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாள் விலக்கு அளித்தது.

ஈரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்ட அமைப்பான ‘ஃபவுண்டேஷன் ஃபார் தி டிஃபென்ஸ் ஆஃப் டெமாக்ரசிஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் டுபோவிட்ஸ் இந்த முடிவைப் பாராட்டினார்.“ஈரானின் எண்ணெய் தொழிலைப் பல ஆண்டுகளாக தடை செய்யும் பணியில் ஈடு பட்டுள்ளோம். இது புத்திசாலித்தனமான நடவடிக்கை… ஆட்சிக்கு எதிரான போரை வெல்ல உதவும்,” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619