ஷா ஆலம், மார்ச் 20 – ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்த 'சும்பாங்கான் இக்லாஸ்' (Sumbangan Ikhlas) திட்டத்தின் கீழ், 200-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU) அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த அறப்பணித் திட்டமானது, சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதோடு, நகராண்மை கழகத்தின் ஊழியர்களிடையே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையையும், ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எம்பிஎச்எஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எம்பிஎச்எஸ் விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத்துடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் முதற்கட்டமாகக் கோலா குபு பாருவில் உள்ள 'ரூமா ஏசான்' (Rumah Ehsan) முதியோர் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்த சுமார் 100 முதியவர்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், சிற்றுண்டிகள், பால் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை அவர்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, உடல் மற்றும் மன ரீதியான மாற்றுத்திறனாளிகள் 184 பேர் தங்கியுள்ள 'ரூமா சினார் ஹராப்பான்' இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகளையும் உலர் உணவுப் பொருட்களையும் வழங்கினர்.
எம்பிஎச்எஸ் தலைவர் ஜுலைஹா ஜமாலுடின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப் பணியில், நகராண்மை கழக உறுப்பினர்களான சரிபா பக்கார், லாவ் சூட் பெங், அப்துல் முனிம் ரோஸ்லின் மற்றும் நகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பங்களிப்போடு இத்தகைய திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றும், நற்பணி நிறுவனங்களுக்கு உதவ பொதுமக்கள் தன்னார்வலர்களாக முன்வர வேண்டும் என்றும் எம்பிஎச்எஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு மட்டுமின்றி, அந்தப் பகுதிகளில் உள்ள பொதுக் கட்டமைப்புகளையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் எப்போதும் பாதுகாப்பான மற்றும் சீரான நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








