கோலாலம்பூர், மார்ச் 20 – நாளை சனிக்கிழமை ஹரி ராயா ஐடில்பித்ரி பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று காலை முதல் நாட்டின் முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து வருகின்றது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிழக்குக்கரை விரைவுச் சாலை (LPT) மற்றும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலை (PLUS) ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் மட்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், தெற்கு நோக்கிய பயணப்பாதைகள் சீராக இருப்பதாகவும் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கிழக்குக்கரை விரைவுச் சாலையில், லெந்தாங் முதல் பெந்தோங் வரையிலான பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து மந்தமாக உள்ளது. அதே வேளையில், கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையில் கிழக்கு நோக்கிச் செல்லும் பாதையில், புக்கிட் திங்கி அருகே 48.1 கிலோமீட்டர் முதல் 57.9 கிலோமீட்டர் வரை சுமார் 9.8 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. அங்கு பழுதான வாகனம் ஒன்று வேகப்பாதையை மறித்து நிற்பதே இந்த நெரிசலுக்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் ஈப்போ வடக்கிலிருந்து கோலாகங்சார் செல்லும் பாதையில், 264.4 கிலோமீட்டரில் இழுவை ஊர்தி ஒன்று பழுதாகி இடதுபுறப் பாதையை மறித்துள்ளதால், கோலாகங்சார் முதல் சாங்காட் ஜெரிங் வரையிலான பகுதியில் போக்குவரத்து சற்று மெதுவாக உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பயணிகள் நீண்ட நேர நெரிசலில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க, தங்களது பயணத்தை முறையாகத் திட்டமிடுமாறும், அண்மைக்கால போக்குவரத்துத் தகவல்களைப் பெற LLM-இன் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1-800-88-7752-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.








