கோலாலம்பூர், மார்ச் 19 - மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து உலக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ள போதிலும், புடி மடானி RON 95 (BUDI95) முயற்சியின் கீழான RON95 பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கிறது.
குடும்பங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி பிற்பகுதியில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து உலகளாவிய விலை உயர்வுக்கு ஏற்ப எரிபொருள் சந்தை விலைகள் படிப்படியாக சரிசெய்யப் படுகின்றன என்றும் நிதியமைச்சு (MOF) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய விலைகளின் தாக்கம் உள்நாட்டு எரிபொருள் விலைகளைப் பாதித்தாலும், அந்த விலை உயர்வை முழுமையாக மக்கள் மீது சுமத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.
மலேசிய குடிமக்களுக்கு BUDI 95 விலையை லிட்டருக்கு RM1.99 ஆகவும், பொதுப் போக்குவரத்து மற்றும் தரைவழி சரக்கு போக்கு வரத்துத் துறைக்கு டீசல் விலையை லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, மாதத்திற்கு 3 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மானியச் சுமையை அரசாங்கம் ஏற்கிறது.
"இந்த மானியத்தை தக்க வைக்கும் நடவடிக்கை, மக்கள் நோன்புப் பெருநாளைச் சீராகக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகளை உறுதி செய்வதற்காகும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் (APM) கீழ் உலகளாவிய எரிபொருள் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, மார்ச் 19 முதல் 25, 2026 வரையிலான காலக் கட்டத்திற்கு RON97-இன் சில்லறை விலை லிட்டருக்கு RM4.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (மார்ச் 18, 2026 விலை, லிட்டருக்கு RM3.85).
டீசல் விலையும் (தீபகற்ப மலேசியா) லிட்டருக்கு RM4.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (மார்ச் 18, 2026 விலை, லிட்டருக்கு RM3.92), அதே நேரத்தில் மானியமில்லாத RON95 மற்றும் டீசல் (சபா, சரவாக் மற்றும் லாபுவான்) விலை முறையே லிட்டருக்கு RM3.27 மற்றும் RM2.15 ஆக நீடிக்கிறது.
நிதியமைச்சின் கூற்றுப்படி, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலக எரிசக்தி சந்தையைத் தொடர்ந்து பாதிக்கும் விநியோக நிச்சயமற்ற தன்மையே உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் சமீபத்திய விலை உயர்வுக்குக் காரணம்.
"மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோலியப் பொருட்கள் உலகளாவிய சந்தையின் மூலமே பெறப்படுகின்றன. எனவே, உள்நாட்டு எரிபொருள் விலைகள் சர்வதேச விலை நகர்வுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன," என்று நிதியமைச்சு கூறியது.
அதே நேரத்தில், விரைவுப் பேருந்துகள், டாக்சிகள், சரக்கு லாரிகள் மற்றும் டிரெய்லர்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மற்றும் தரைவழி சரக்கு போக்கு வரத்துத் துறைகளைச் சேர்ந்த 400,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKDS) மற்றும் மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKPS) உள்ளிட்ட இலக்கு மானியத் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்தது.
"உலக எண்ணெய் சந்தையில் நிலவும் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிர்வகிப்பதில் மடாணி அரசாங்கம் ஒரு விவேகமான மற்றும் பொறுப்பான அணுகு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்."
"உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை எதிர்கொண்ட போதிலும், மக்களைப் பாதுகாப்பதற்கும் உள்நாட்டுப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் மடாணி அரசாங்கம் மானியத்தின் ஒரு பகுதியைத் தக்க வைத்துக் கொண்டதன் விளைவாக மலேசியாவில் எரிபொருள் விலை இப்பகுதியில் மிகக் குறைந்த ஒன்றாக உள்ளது," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
-- பெர்னாமா
புடி மடானி RON95 மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கிறது - நிதியமைச்சு
19 மார்ச் 2026, 3:08 AM
தொடர்புடைய செய்திகள்
video
Tular isi RON95 dalam tong plastik, pemilik kenderaan diburu KPDN
Kathiravan Manoharan
25 மார்ச் 2026

selangor
பிளாஸ்டிக் கொள்கலன்களில் RON95 பெட்ரோலை நிரப்பியது தொடர்பாக ஜோகூர் KPDN விசாரணை
Shalini Rajamogun
24 மார்ச் 2026

national
பூடி மடாணி RON95 மானிய முறைகேடு: சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டையை முடக்க நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை
Shalini Rajamogun
24 மார்ச் 2026

national
RON95 விலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் முயற்சி
Shalini Rajamogun
9 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?






