திராட்சை கர்ப்பம்: மலேசியாவில் இயல்பற்ற கர்ப்பத்தின் அபாயங்கள், சிகிச்சை மற்றும் கண்காணிப்பு

18 மார்ச் 2026, 5:01 AM
திராட்சை கர்ப்பம்: மலேசியாவில் இயல்பற்ற கர்ப்பத்தின் அபாயங்கள், சிகிச்சை மற்றும் கண்காணிப்பு

ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான அந்த 46 வயது பெண்மணி, தனது ஆறாவது கர்ப்பத்தை எதிர்கொள்ள, முந்தைய அனுபவங்களே போதுமானது என்று கருதினார். அதனால், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்லவில்லை.

எதிர்பாராதவிதமாக, அவரது கர்ப்பம் இரண்டாவது மூன்று மாத காலக்கட்டத்தை (நான்கு முதல் ஆறு மாதங்கள்) எட்டியபோது, அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு, அங்கு நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ‘திராட்சை கர்ப்பம்’ (molar pregnancy) ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தீவிரமான இரத்தப்போக்கு மற்றும் கருப்பை இயல்பை விட பெரிதாக வளர்ந்திருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற, கருப்பையை அகற்றும் ‘ஹிஸ்டெரெக்டோமி’ அறுவை சிகிச்சையைத் தவிர மருத்துவக் குழுவினருக்கு வேறு வழியில்லை.

மலேசியாவில், ஒவ்வொரு 1,000 பிரசவங்களிலும் 2.6 திராட்சை கர்ப்ப வழக்குகள் பதிவாகின்றன. இந்த எண்ணிக்கை, ஐக்கிய ராஜ்யத்தில் பதிவாகும் 1,000 பிரசவங்களுக்கு 0.8 முதல் 1.2 வழக்குகள் என்ற எண்ணிக்கையை விட மிக அதிகம். தாமதமான வயதில் கர்ப்பம் தரிப்பது, பெண்களுக்கு இந்த அபாயத்தை மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

திராட்சை கர்ப்பம் என்றால் என்ன?

திராட்சைக் கொத்துகளைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இப் பெயர் பெற்றதாகக் கூறும் கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு நிபுணர் டாக்டர் மஸ்துரா மாட் யூசோப், கருமுட்டையுடன் விந்தணு சேரும்போது ஏற்படும் மரபணு அல்லது குரோமோசோம் சமநிலையின்மையால் நஞ்சுக்கொடி செல்கள் அசாதாரணமாக வளர்ச்சியடைவதே திராட்சை கர்ப்பம் என்கிறார்.

“மோலார் கர்ப்பத்தில் ‘முழுமையான மோல்’ (complete mole) மற்றும் ‘பகுதி மோல்’ (partial mole) என இரண்டு வகைகள் உள்ளன. காலியான கருமுட்டையுடன் விந்தணு சேரும் போது ‘முழுமையான மோல்’ ஏற்படுகிறது. இதில் கரு வளர்ச்சி அடையாமல், தந்தையின் மரபணுப் பொருட்கள் மட்டுமே உருவாகும். இந்த வகை, கடுமையான சிக்கல்களாக மாறும் அபாயம் அதிகம் கொண்டது," என்று அவர் விளக்கினார்.

"ஒரு கருமுட்டையுடன் இரண்டு விந்தணுக்கள் இணைவதால், அசாதாரண குரோமோசோம் எண்ணிக்கையுடன் கரு உருவாகும்போது ‘பகுதி மோல்’ ஏற்படுகிறது. இதில் கருவின் சில திசுக்கள் இருந்தாலும், அது உயிர் வாழ இயலாது. இருப்பினும், முழுமையான மோலுடன் ஒப்பிடும்போது, இதில் ஏற்படும் சிக்கல்களுக்கான அபாயம் மிகவும் குறைவு," என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

திராட்சை கர்ப்பத்தின் முக்கிய அபாயம், அது ‘கெஸ்டேஷனல் ட்ரோபோபிளாஸ்டிக் நியோபிளாசியா’ (Gestational Trophoblastic Neoplasia - GTN) எனப்படும் புற்றுநோயாக மாறும் வாய்ப்பு இருப்பதே ஆகும்.

"GTN என்பது கர்ப்பகால திசுக்கள் தொடர்ந்து அசாதாரணமாக வளர்ந்து, ‘கோரியோகார்சினோமா’ (choriocarcinoma) போன்ற தீவிரமான புற்றுநோயாக மாறக் கூடிய நோய்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தப் புற்றுநோய் நுரையீரல் அல்லது மூளை போன்ற மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்," என்றார் அவர்.

ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், கீமோதெரபி சிகிச்சை மூலம் GTN நோயாளிகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்று டாக்டர் மஸ்துரா கூறினார்.

அதே சமயம், பலர் நம்புவது போல் உணவுப் பழக்கம் அல்லது அன்றாட நடவடிக்கைகளால் திராட்சை கர்ப்பம் ஏற்படுவதில்லை என்றும், கருத்தரிப்பின் போது ஏற்படும் மரபணுப் பிழைகளால் இது தோராயமாக நிகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அசாதாரண யோனி இரத்தப்போக்கு, கர்ப்பகால ஹார்மோன் அளவு மிக அதிகமாக இருப்பதால் ஏற்படும் கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி, கர்ப்பத்தின் உண்மையான வயதை விட கருப்பை வேகமாக வளர்வது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

வயது அதிகரிப்பதும், கருப்பை அகற்றுதலும்

பெண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, திராட்சை கர்ப்பம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

"வயது கூடும் போது, கருமுட்டையின் தரம் குறைகிறது. எனவே, திராட்சை கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது," என்று கூறிய டாக்டர் மஸ்துரா, முன்பு திராட்சை கர்ப்பம் ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் ஏற்படும் அபாயம் அதிகம் என்றார்.

இதற்கான முக்கிய சிகிச்சையாக, கருப்பையில் உள்ள அசாதாரண கர்ப்பத் திசுக்களை அகற்றும் ‘கருப்பை வெளியேற்றும்’ செயல்முறையை நிபுணர்கள் மேற்கொள்வார்கள். இந்த அறுவை சிகிச்சை, இரத்த மாற்று ஆதரவுடன் அறுவை சிகிச்சை அரங்கில் நடத்தப்படும்.

"சாதாரண கருச்சிதைவைப் போலல்லாமல், மோலார் திசுக்களில் இருந்து எளிதில் இரத்தம் வடியும். இதனால், தாமதமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது," என்று அவர் விளக்கினார்.

"பெரும்பாலான நோயாளிகளுக்கு, கருப்பை வெளியேற்றும் செயல்முறையே போதுமானது. இனிமேல் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடாத பெண்கள் அல்லது அதிக அபாயம் உள்ளவர்களுக்கு, உயிர் காக்கும் நடவடிக்கையாக மட்டுமே ஹிஸ்டெரெக்டோமி செய்யப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

தொடர் கண்காணிப்பு

கருப்பை வெளியேற்றும் சிகிச்சைக்குப் பிறகு, மீதமுள்ள மோலார் திசுக்கள் GTN-ஆக வளரவில்லை என்பதை உறுதிப்படுத்த, நோயாளிகள் பீட்டா-எச்.சி.ஜி (Beta-hCG) ஹார்மோன் அளவை குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் மஸ்துரா விளக்கினார்.

"முழுமையான மோல் வழக்குகளில், ஹார்மோன் அளவு இயல்பு நிலைக்கு வரும் வரை வாரந்தோறும் கண்காணிக்கப்படும். பின்னர், ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் தொடரும். இந்தக் காலகட்டத்தில், நோயாளிகள் கர்ப்பம் தரிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில், புதிய கர்ப்பம் ஹார்மோன் அளவீடுகளைப் பாதிக்கும்," என்றார்.

ஹார்மோன் அளவு சீராகக் குறையா விட்டாலோ அல்லது மீண்டும் அதிகரித்தாலோ, நோயாளி மேலதிக மதிப்பீட்டிற்கு மகப்பேறியல் புற்றுநோயியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப் படுவார்.

கண்காணிப்புக் காலத்தில், புதிய கர்ப்பத்தைத் தவிர்க்க ஹார்மோன் மாத்திரைகள், ஊசிகள் அல்லது ஆணுறைகள் போன்ற குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்த நோயாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பரிந்துரை மையங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு

இதற்கிடையில், சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (HCTM) மகப்பேறு மற்றும் மகளிர் நல நிபுணர் பேராசிரியர் டாக்டர் அனிசா அலி, திராட்சை கர்ப்ப வழக்குகளுக்கு எனத் தனியாக பரிந்துரை மையங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இது சிகிச்சை மற்றும் கண் காணிப்பின் தொடர்ச்சியை மிகவும் சீராக மேற்கொள்ள உதவும்.

"இத்தகைய பரிந்துரை மையங்கள், அதிக அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதோடு, கண்காணிப்பு நெறிமுறைகள் சீராகச் செயல்படுத்தப் படுவதையும் உறுதி செய்யும்," என்று அவர் கூறினார். HCTM மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் ஏழு முதல் எட்டு GTN நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை சிறியதாகத் தோன்றினாலும், இது கடுமையான சிக்கல்களை அடைந்து, சிறப்புப் புற்றுநோயியல் சிகிச்சை தேவைப்படும் வழக்குகளைக் குறிக்கிறது.

எனவே, தேசிய அளவில் அல்லது குறைந்தபட்சம் மாநில அளவிலாவது மோலார் நோயாளிகளுக்கான பதிவேட்டை (registry) அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

"இந்தப் பதிவேடு, தொடர் சிகிச்சையைக் கண்காணிப்பதை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், மருத்துவத் தணிக்கை மற்றும் ஆராய்ச்சிக்கான தரவுகளைத் திறமையாகச் சேகரிக்கவும் உதவும். இது எதிர்காலத்தில் இந்த நோயைப் பற்றிய புரிதலையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்தும்," என்றார் அவர்.

போக்குவரத்துச் செலவுகள், மன அதிர்ச்சி போன்ற காரணங்களால் சில நோயாளிகள் தொடர் கண்காணிப்புக்கு வராமல் இருப்பது ஒரு முக்கிய சவாலாக உள்ளது என்றும், நோயாளிகள் கண்காணிப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, முதன்மை மருத்துவமனைகளுக்கும் பரிந்துரை மருத்துவமனைகளுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு அமைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619