ஷா ஆலம், மார்ச் 18 : சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் பயனாக, மாநிலத்தின் வறுமை விகிதம் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் சுமார் 18,000-ஆக இருந்த ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஏறக்குறைய 5,000-ஆகக் குறைந்துள்ளதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
'இஹ்சான் ரமலான்' (Ihsan Ramadan) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "மாநிலத்தில் கடும் வறுமையை ஒழிப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது எங்களின் கவனம் வறுமை விகிதத்தைக் குறைப்பதிலும், வறுமையிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் அந்த நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலுமே உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
வறுமை என்பது நிலையான ஒன்றல்ல, அது அவ்வப்போது மாறக்கூடியது என்றாலும், மக்களை வறுமைச் சுழற்சியிலிருந்து விடுவிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, நான்கு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அவர் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்றார். மேலும், எதிர்வரும் ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 100 பேருக்கு உணவுப் கூடைகளையும் பாப்பாராய்டு வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாடநெறிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"திவேட் திட்டங்கள் ஒருவரின் திறனை மேம்படுத்தி, அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும். சிறந்த வருமானம் கிடைப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்," என்று அவர் கூறினார்.
குறைந்த வருமானம் கொண்ட சுமார் 3,500 குடும்பங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகச் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இக்குடும்பங்கள் மீண்டும் கடும் வறுமை நிலைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இத்தகைய செயலூக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.




