கோத்தா பாரு, 18 மார்ச்: இன்று அதிகாலை கிளந்தான் மாநிலத்தின் மச்சாங்-தானா மேரா சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தானா மேரா பண்டார் பாரு பகுதியில் அதிகாலை 4.35 மணியளவில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய மூதாட்டி மற்றும் 14 வயதுடைய சிறுமி என PBK II செயல்பாட்டு தளபதி ஹம்டான் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
விபத்தில் சிக்கிய பெரோடுவா மைவி ரகக் காரில் பயணம் செய்த ஆறு பேரில் இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றுமொரு வாகனமான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) காரில் ஒரு நபர் பயணம் செய்ததாகவும், அவர் உயிர் தப்பியதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தானா மேரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மேல் விசாரணைக்காக இவ்விவகாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








