ஜொகூர் பாரு, மார்ச் 17 - ஜொகூர் மாநிலம் முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் 'MySaveFood' திட்டத்தின் மூலம், நல்ல மற்றும் பாதுகாப்பான 2.5 டன்னுக்கும் அதிகமான உபரி உணவு சேகரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4,000 பேருக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப் பட்டுள்ளது.
ஜொகூர் கார்ப்பரேஷன் அறக்கட்டளையின் (Yayasan JCorp) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ மிசான் யாஹ்யா கூறுகையில், ஜொகூர் பாரு, கூலாய், சிகாமாட், பத்து பகாட், மெர்சிங், கோத்தா திங்கி, மூவார் மற்றும் ரெங்கம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ரமலான் சந்தைகளில் விற்கப்படாத உணவைச் சேகரித்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
"இந்த உணவு அஸ்னாஃப் மற்றும் பி40 சமூகத்தினருக்கு, குறிப்பாக மக்கள் வீட்டுத் திட்டப் (PPR) பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது."
"இந்த நடவடிக்கை உபரி உணவு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், தேவைப் படுபவர்களின் சுமையைக் குறைக்கவும், உணவு வளங்களை விவேகமாக நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கவும் உதவுகிறது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
உணவு வீணாவது என்பது ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது சமூகத்தின் மனப்பான்மையில் மாற்றத்தைக் கோருகிறது என்றும், இந்தத் திட்டத்தின் மூலம், நல்ல உபரி உணவு கழிவாக மாறாமல் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் மிசான் கூறினார்.
இந்த மாபெரும் வெற்றி, பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு சமூகத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு விநியோகத்தைத் தவிர, ரமலான் மாதத்தில் தேவை அதிகரிக்கும் போது உணவு வீணாவதைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கும் சந்தை வியாபாரிகளுக்கும் கல்வி கற்பிப்பதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது.
மேலும், முறையான நிர்வாகத்தை உறுதி செய்ய, சேகரிக்கப்பட்ட உணவின் அளவைப் பதிவு செய்தல், உணவு வகைகளைப் பிரித்தல் மற்றும் பயனாளிகளுக்கு விநியோகிக்கும் செயல் முறையைக் கண்காணித்தல் போன்றவற்றுக்கு ஒரு பிரத்யேக செயலியும் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஜொகூரின் 'MYSaveFood' திட்டம், யாசான் ஜே கார்ப், பெமுடா கெமா மலேசியா மற்றும் ஜொகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
கெராக்கான் பெங்குனா சிஸ்வா உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் பல தொடர்புடைய நிறுவனங்களும் இதற்கு ஆதரவளிக்கின்றன.
-- பெர்னாமா








