கோலாலம்பூர், மார்ச் 16: 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் தொடருக்கான (Siri 2) பி.எல்.கே.என் (PLKN 3.0) பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை தேசிய சேவை பயிற்சித் துறை (JLKN) அதிகரித்துள்ளது.
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் உள்ள மல்பட் வில்லேஜ் (Kem MALBATT Village) முகாம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்கள் தங்களின் தேர்வு நிலையை இன்று மதியம் 1.00 மணி முதல் 'ePLKN 3.0' அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ யாகூப் சமிரான் தெரிவித்துள்ளார்.
புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்கள், எதிர்வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் தங்களது வருகையை அதே இணைப்பின் வழியாக உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
இம்முறை சுமார் 600 பயிற்சியாளர்கள் மல்பட் வில்லேஜ் முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதன் மூலம், கோலாலம்பூர் ரெஜிமென் 51 அஸ்கார் வத்தானியா மற்றும் பகாங், பெக்கான் ரெஜிமென் 505 ஆகிய முகாம்களைத் தொடர்ந்து, தற்போது செயல்பாட்டிற்கு வரும் மூன்றாவது முகாமாக இது அமைகிறது.
இனிவரும் காலங்களில் முகாம்களின் தயார் நிலையைப் பொறுத்து மற்ற இடங்களும் படிப்படியாகத் திறக்கப்படும் என்று டத்தோ யாகூப் விளக்கமளித்தார்.
மல்பட் வில்லேஜ் முகாமில் 350 ஆண் பயிற்சியாளர்களும் 250 பெண் பயிற்சியாளர்களும் தங்க வைக்கப்படுவார்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இருபாலினரும் ஒரே முகாமில் இருந்தாலும், தங்கும் இடம், பயிற்சிகள் மற்றும் தினசரி நடவடிக்கைகள் என அனைத்தும் தனித்தனியாகவே (Company-wise) மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்தார்.
45 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியின் போது, மாணவர்களின் பாதுகாப்பு, வசதிகள் மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
2026-ஆம் ஆண்டின் இரண்டாம் தொடருக்கான இந்தப் பயிற்சி ஏப்ரல் 25 முதல் ஜூன் 8 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் நான்கு பயிற்சித் தொடர்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








