ஜோகூர் பாரு, மார்ச் 15: பள்ளி மாணவனை அடித்து காயம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக, 48 வயதுடைய பள்ளித் தலைமையாசிரியர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட 7 வயது மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அன்றைய தினம் காலை 9.46 மணியளவில் 40 வயதுடைய தந்தையிடமிருந்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக ஜோகூர் பாரு வடக்கு மாவட்டக் காவல்துறை படைத் தலைவர் ஏசிபி ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, அன்று காலை 7.39 மணியளவில் பள்ளியின் உணவகத்தில் இருந்தபோது, அந்த மாணவனை தலைமையாசிரியர் அடித்ததாக நம்பப்படுகிறது.
தகவலறிந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அதே நாள் மாலை 4.55 மணியளவில் ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறை தலைமையக வளாகத்தில் வைத்து அந்தத் தலைமையாசிரியரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு முன்னதாக எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபரான அந்தத் தலைமையாசிரியர் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நேற்று வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
த்ற்போது அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, காயமடைந்த மாணவனின் புகைப்படங்களுடன் கூடிய இச்சம்பவம் 'இசு செமாசா ஆன்லைன்' (Isu Semasa Online) எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








