கோலாலம்பூர், மார்ச் 13: உலகத் தரம் வாய்ந்த போட்டிகளில் ஈடுகொடுக்கும் வகையில், நாட்டின் தேசிய பாரா வில்வித்தை (Para Archery) வீரர்களுக்குப் புதிய மற்றும் அதிநவீனக் கருவிகளை வழங்குவதற்குத் தேசிய விளையாட்டு மன்றம் (MSN) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை கருவிகளின் பற்றாக்குறையினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று புக்கிட் ஜலீலில் நடைபெற்ற செயல்திட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தேசிய வில்வித்தை சங்கத்தின் (NAAM) செயலாளர் முகமது ஜுல் இஸி அப்துல் மனாஃப் விளக்கினார்.
தற்போதுள்ள கருவிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் சர்வதேச அரங்கில் நமது வீரர்கள் இன்னும் கூடுதலான போட்டித் தன்மையுடன் திகழ்வதை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
"புதிய உபகரணங்களைக் கொண்டு வருவதற்கான வரவுசெலவுத் திட்டத்திற்குத் தேசிய விளையாட்டு மன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இத்தகைய தரம் உயர்த்தும் பணிகள் சிறு சிறு பகுதிகளாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும், தற்போது பயன்பாட்டில் உள்ள சில கருவிகள் காலாவதியான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால், இம்முறை ஒட்டுமொத்தமாக அனைத்துக் கருவிகளையும் நவீனமயமாக்க MSN வாய்ப்பளித்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
குறிப்பாக, வில்லின் முக்கிய பாகங்களான 'ரைசர்' (Riser) மற்றும் 'லிம்ப்ஸ்' (Limbs) உள்ளிட்ட அத்தியாவசிய அம்சங்கள் அனைத்தும் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படவுள்ளன.
இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கருவிகள், பயிற்சியின் போதும் போட்டிகளின் போதும், நமது பாரா வில்வித்தை வீரர்கள் தங்களின் சீரான திறனை எவ்விதத் தொய்வுமின்றி வெளிப்படுத்தப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை என்றாலும், இது தேசிய பாரா வில்வித்தை துறையில் ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.







