ஷா ஆலம், மார்ச் 13: கடந்த மார்ச் 9-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டுள்ள 25 வயது இளம்பெண் ஒருவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான புகார் நேற்று நண்பகல் 12.16 மணியளவில் காவல்துறையினருக்குக் கிடைத்ததாகக் காஜாங் மாவட்டக் காவல்துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். காணாமல் போன பெண் நூர் தினி சானி ஹஸ்ருல் சானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்பெண் சுமார் 154 முதல் 155 சென்டிமீட்டர் உயரமும், 48 முதல் 49 கிலோகிராம் எடையும் கொண்ட மெலிந்த உடல்வாகு உடையவர் என்று காவல்துறையினர் விவரித்துள்ளனர். அவர் கடைசியாகக் காணப்பட்ட போது கருப்பு நிறத் துடோங், கருப்பு நிற பிளேஸர் மற்றும் கருப்பு நிற நீண்ட காற்சட்டை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஜாலான் செபகாட் இண்டா 2/1 இல் அமைந்துள்ள ஸ்ரீ செம்பாகா அடுக்குமாடி குடியிருப்பின் ஏ-15-05 எனும் முகவரியே அவர் கடைசியாகக் கண்டறியப்பட்ட இடமாகும்.
எனவே, இந்த இளம்பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை நாடுமாறு அல்லது காஜாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 03-89114222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நாஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.
மேலும், உதவி புலனாய்வு அதிகாரி சர்ஜன் கைரில் அஸ்வான் யுண்டிஸை 013-4480997 என்ற எண்ணிலும் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







