கோலாலம்பூர், மார்ச் 13: இந்த ஆண்டு ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது குடும்பத்தினர் நேரில் சந்திப்பதற்கான சிறப்பு அனுமதியை மலேசியச் சிறைச்சாலைத் துறை வழங்கியுள்ளது. பெருநாளின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் இந்தச் சந்திப்புகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தச் சிறப்புச் சந்திப்பு, நாட்டில் உள்ள சிறைச் சாலைகள், ஒழுக்க மேம்பாட்டு மையங்கள் (PPA), சிறப்பு மறுவாழ்வு மையங்கள் (PPK), சிறப்புக் தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளிகள் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடிச் சந்திப்புகள் காலை 8.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடைபெறும். வருகையாளர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் சந்திப்பு அட்டையை (Visit Card) மறவாமல் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்த உதவும் எனத் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, கைதிகளுக்கு வெளியே இருந்து உணவு அல்லது பானங்களைக் கொண்டு வர அனுமதி இல்லை. எனினும், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள உணவகங்களில் (Canteen) உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இச்சிறப்பு அனுமதி முதன்மையாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கைதிகளுக்கே வழங்கப்படுகிறது.
கைதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சிறைச்சாலைத் துறையே கவனித்துக் கொள்வதால், வருகையாளர்கள் கைதிகளுக்குப் பணம் வழங்குவது ஊக்குவிக்கப்படுவதில்லை. ஒருவேளை தேர்வு கட்டணம் போன்ற தவிர்க்க முடியாத தேவைகளுக்காகப் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதற்குரிய அதிகாரப்பூர்வப் ரசீதைப் (PPT 28) பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறைச் சட்டவிதிகளின்படி வருகையாளர்கள் உள்ளே நுழையும் போதும் வெளியேறும் போதும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரில் வர இயலாத குடும்பத்தினருக்காக மார்ச் 26 முதல் 28-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இணையம் வாயிலான (Online) சந்திப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த மேல் விவரங்களுக்குப் பொதுமக்கள் சிறைச்சாலை நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனச் சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.








