ஷா ஆலாம், மார்ச் 12: பொது இடங்களில் சிறு குப்பைகளை வீசிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் சிகரெட் துண்டுகளை வீசியவர்கள் என திடக் கழிவு மற்றும் பொதுச் துப்புரவு மேலாண்மை நிறுவனம் (SWCorp) வெளிப் படுத்தியுள்ளது.
அதன் தலைமைச் செயல் முறை அதிகாரி, காலிட் முகமது கூறுகையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் திடக் கழிவு மற்றும் பொதுச் துப்புரவு மேலாண்மை சட்டம் 2007 (சட்டம் 672) கீழ் அமலாக்கம் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கைதின் அடிப்படையில் இந்த நிலை கண்டறியப் பட்டுள்ளது என்றார்.
அமலாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில், பெரும்பாலான வழக்குகள் டிஷ்யூ அல்லது உணவு மற்றும் பானங்கள் கொள்கலன்கள் போன்ற சிறு குப்பைகளை வீசுவது சம்பந்தப் பட்டவையாக இருந்தன.
"இருப்பினும், சமீபத்திய கைதின் அடிப்படையில், கிட்டத்தட்ட 90 விழுக்காடு வழக்குகள் சிகரெட் துண்டுகளை வீசிய நபர்களுடன் தொடர்புடையவை."
"நேற்று வரை, இந்தச் சட்டத்தின் கீழ் 1,002 நபர்கள் சிறு குப்பைகளை வீசிய குற்றத்தைச் செய்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 189 வழக்குகள் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 76 வழக்குகள் விசாரிக்கப்பட்டு முடிக்கப் பட்டுள்ளன," என்று அவர் பிஎச் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், சமூகச் சேவை ஆணையின் (PKM) இரண்டாவது தொடரில் 26 முதல் 59 வயதுக்குட்பட்ட ஐந்து குற்றவாளிகள் ஈடுபட்டதாக காலிட் கூறினார். அவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண், ஒரு இந்தியக் குடிமகனும் அடங்குவார்.
"எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டிய நான்கு மணி நேர சமூக சேவையை மேற் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் சாலைகளை துப்புரவு செய்தல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் மற்றும் கழிவறைகளை கழுவுதல் போன்ற பணிகள் அடங்கும்."
"ரமலான் மாதத்தில் PKM அமலாக்கத்தின் போது, முஸ்லிம் குற்றவாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு பொருத்தமான பணி இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன," என்றார் அவர்.
குற்றவாளிகளால் அடிக்கடி கூறப்படும் காரணங்கள் குறித்து கருத்து தெரிவித்த காலிட், குப்பைத் தொட்டிகள் அருகிலேயே இருந்தாலும், அவை இல்லை என்பது ஒரு பொதுவான காரணமாகக் கூறப்படுகிறது என்றார்.
"சட்டம் 672-ஐ ஏற்றுக்கொண்ட ஏழு மாநிலங்களில் மார்ச் 28 அன்று ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை உள்ளடக்கிய மூன்றாவது தொடர் PKM மூலம் SWCorp தனது அமலாக்கத்தை தொடரும்," என்று அவர் கூறினார்.
பொது இடங்களில் சிறு குப்பைகளை வீசிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் சிகரெட் துண்டுகளை வீசியவர்கள்
12 மார்ச் 2026, 7:48 AM
உங்கள் கருத்து என்ன?




