சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்குப் புதிய பாதுகாப்புத் திட்டம் விரைவில் அமல்

12 மார்ச் 2026, 3:15 AM
சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்குப் புதிய பாதுகாப்புத் திட்டம் விரைவில் அமல்

புத்ராஜெயா, மார்ச் 12 – வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்குத் தினசரி பயணம் மேற்கொள்ளும் மலேசியத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய 'பயணிகள் திட்டம்' (Skim Pengembara) விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) கீழ் கொண்டுவரப்படவுள்ள இந்தத் திட்டம், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நடைபெற்ற மனிதவள அமைச்சின் (KESUMA) மாதாந்திரக் கூட்டத்திலும், நோன்புத் துறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு பேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, சிங்கப்பூரில் பணிபுரியும் சுமார் 400,000 மலேசியர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"சிங்கப்பூருக்கு வேலைக்காகச் சென்று வரும் பல மலேசியர்களிடம் முறையான பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. வேலைக்குச் செல்லும் வழியிலோ அல்லது திரும்பும் போதோ ஏதேனும் விபத்து நேரிட்டால், அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் யார் கவனிப்பார்கள்? என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியது போல, எவரும் கைவிடப்படக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்," என டத்தோஸ்ரீ ரமணன் உறுதியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மனிதவள துணை அமைச்சர் டத்தோ கைருல் பிர்தாஸ் அக்பர் கான் மற்றும் பெர்கேசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜிஸ் முகமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது குறித்துப் பேசிய டாக்டர் முகமட் அஸ்மான், எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் இந்தத் திட்டம், எல்லை தாண்டிப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619