ஈப்போ, மார்ச் 10 –தெலுக் இந்தான் அருகே உள்ள கம்போங் செலாபாக், பத்து 4 பகுதியில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் தொழிற்கல்வி கல்லூரி (KV) மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட அறுவடை அரிவாள் (சபிட்) எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் பட்டதே இந்த உயிரிழப்பிற்கு காரணமாகும்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 18 வயதான அந்த மாணவர் பலியானதை உறுதிப்படுத்திய ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின், அவருடன் பயணித்த 17 வயது நண்பர் கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 39 மற்றும் 52 வயதுடைய இரண்டு வெளிநாட்டு ஆடவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் அரிவாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கானது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304A-இன் கீழ் கவனக்குறைவாக மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் தீவிரமாகப் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்க அனுமதி கோரி இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.




