விமானச் சேவைத் தடையால் சவூதி அரேபியாவில் 1,600 மலேசிய உம்ரா பயணிகள் சிக்கித் தவிப்பு

4 மார்ச் 2026, 7:50 AM
விமானச் சேவைத் தடையால் சவூதி அரேபியாவில் 1,600 மலேசிய உம்ரா பயணிகள் சிக்கித் தவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 4 – மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாகப் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும், தடைப்பட்டதாலும் சுமார் 1,600 மலேசிய உம்ரா பயணிகள் சவூதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாக ஜித்தாவுக்கான மலேசியத் தூதர் தெங்கு முகமட் ட்ஸாரைஃப் ராஜா அப்துல் காதீர் தெரிவித்தார்.

ஜித்தா, மக்கா மற்றும் மதீனாவில் தங்கியிருக்கும் பயணிகளுடன் தங்கள் தரப்பு தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். சவூதி அரேபியாவில், குறிப்பாக மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய இடங்களில் நிலைமை பாதுகாப்பாகவும், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமின்றியும் உள்ளது," என்று அவர் பெர்னாமா டிவி-யின் ‘மலேசியா பெத்தாங் இனி’ நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பயணிகளில் பெரும்பாலானோர் மலேசியா ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் போன்ற விமான நிறுவனங்கள் மூலம் நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாக தெங்கு முகமட் ட்ஸாரைஃப் குறிப்பிட்டார்.

தற்போது, சவுதியா ஏர்லைன்ஸ் ஜித்தா-விலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவைகளை வழங்குகிறது. அதே நேரத்தில் ஏர்ஏசியா விமானச் சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

“பல பயணிகள் தாங்களாகவே அல்லது பயண முகவர்கள் மூலம் தங்கள் விமானங்களை சவுதியா ஏர்லைன்ஸுக்கு மாற்றியுள்ளனர். ஒரு சிலர் வெற்றிகரமாக மலேசியா திரும்பிவிட்டனர்,” என்றார் அவர்.

“இதனிடையே, மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளுக்குத் தங்குமிட வசதிகளை அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது," என்றும் அவர் கூறினார். 

பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவி செய்வதற்கும், நிலைமையைக் கண்காணிப்பதற்கும் ஜித்தா-வில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் 24 மணி நேர செயல்பாட்டு அறையைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜோர்டானின் வான்வெளி மூடப்பட்டதால் ஜித்தா-வில் சிக்கித் தவித்த 19 மலேசிய மாணவர்கள் உட்பட, உதவி தேவைப்படும் மலேசியர்களுக்குத் தற்காலிக தங்குமிடம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் தூதரகம் ஒருங்கிணைத்து வருகிறது. 

“அந்த மாணவர்களுக்கு தூதரகத்திலும், நாங்கள் ஏற்பாடு செய்த சேவை குடியிருப்புகளிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர்.  இன்று காலை நாங்கள் ஏற்பாடு செய்த சிறப்புப் பேருந்து மூலம் அவர்கள் நாடு திரும்பினர்,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய நிலவரம் குறித்து சவூதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மோதல் நீடித்தால் சிறப்பு விமானங்கள் தேவைப்படுமா என்பது குறித்தும் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறினார்.

“தற்போதைக்கு, நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். விமான நிறுவனங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, சேவைகளை மீண்டும் தொடங்கத் தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகின்றன,” என்றார் அவர்.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நெருக்கடி காரணமாகப் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. இது சர்வதேச விமானச் சேவைகளைப் பாதித்துள்ளது.

இந்த நிச்சயமற்ற சூழல், சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் முக்கிய மையங்களுக்கான விமான அட்டவணைகளைப் பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்ய அல்லது மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619