கிள்ளான், தாமான் செந்தோசாவில் தனது முன்னாள் காதலியின் மகனை கொலை செய்த, 33 வயது ஆடவனுக்கு தூக்கு.

28 பிப்ரவரி 2026, 2:26 AM
கிள்ளான், தாமான் செந்தோசாவில் தனது முன்னாள் காதலியின் மகனை கொலை செய்த, 33 வயது ஆடவனுக்கு தூக்கு.

ஷா ஆலம், பிப் 27: தனது முன்னாள் காதலியின் மூன்று வயது மகனை 2021-இல் கொலை செய்த குற்றத்திற்காக, 33 வயதான ஆடவர் ஒருவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது. பிரதிவாதித் தரப்பு நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதை அடுத்து, 33 வயதான எஸ். தவந்தகுமார் என்பவருக்கு நீதிபதி நோர்லிசா ஒத்மான் இந்தத் தண்டனையை விதித்தார்.

குற்றச்சாட்டின் படி, கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு வீட்டில், டிசம்பர் 24, 2021 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் அச்சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக தவந்தகுமார் மீது குற்றம் சாட்டப் பட்டது.

குற்றம் நிரூபிக்கப் பட்டால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படி ஆகியவற்றை வழங்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.

தனது தீர்ப்பில், நீதிபதி நோர்லிசா, குற்றவாளியின் செயலுக்கு தூக்குத் தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் ஈடாகாது என்று நீதிமன்றம் கருதுவதாகக் கூறினார்.

"இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மூன்று வயது சிறு குழந்தை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. சிறிய, மெலிந்த சிறுவனின் உடலைக் காட்டும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றம் பார்த்தது.”"அந்தச் சிறு குழந்தை, குற்றவாளியால் பைப் கட்டை, மரக்கட்டை, பெல்ட் மற்றும் துணி ஹேங்கர் ஆகியவற்றைக் கொண்டு கொடூரமாகத் தாக்கப் பட்டுள்ளான்," என்று அவர் கூறினார்.

எதிர்த்துப் போராட முடியாத அந்தச் சிறுவன் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு, இறுதியில் அவனது சிறிய உடல் ஒரு அறைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, மூச்சு நிற்கும் வரை கொடூரமாகத் தாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் (TPR) நூருல் ஃபரா அகிலா அஹ்மத் ஃபுவாட், கொலைக் குற்றம் மிகவும் கடுமையானது என்றும், இந்த வழக்கில் குற்றவாளி சிறிதும் இரக்கமின்றி சித்திரவதை செய்து கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார் என்றும் கூறினார்.

குற்றவாளி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறுவனைத் தாக்கியதால், அவனுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், பாதிக்கப் பட்டவனின் தலையை தண்ணீரில் மூழ்கடித்து கிட்டத்தட்ட மூச்சுத் திணற வைத்துள்ளார்.

"சிறுவன் பலவீனமான பிறகு, குற்றவாளி அவனது கழுத்தையும் கைகளையும் கடித்து நெரித்துள்ளான், இறுதியில் அவன் அசைவற்ற நிலையை அடைந்தான்," என்று கூறிய அவர், சிறுவன் அசைவில்லாமல் போன பின்னரே குற்றவாளி அடிப்பதை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், குற்றவாளியின் இந்தக் கொடுஞ்செயல், அந்தச் சிறுவனின் தாயின் கண்முன்னே நிகழ்ந்துள்ளது. இது அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது என்று நூருல் ஃபரா அகிலா கூறினார்.

"பாதிக்கப்பட்டவன் குற்றவாளியின் சொந்த ரத்தம் இல்லை என்றாலும், அவன் ஒரு சிறிய குழந்தை என்பதாலும், சுற்றியுள்ள பெரியவர்களின் பாதுகாப்பு அவனுக்குத் தேவை என்பதாலும், அன்புடன் அவனைப் பாதுகாத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

அவருடன் இணைந்து TPR மரியம் ஜமீலா அப் மனாஃப் ஆஜரானார்.மேலும், தவந்தகுமாருக்கு 2021-இல் போதைப்பொருள் குற்றத்திற்காகவும், 2015-இல் தண்டனைச் சட்டம் பிரிவு 506-இன் கீழும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கிடையில், வழக்கறிஞர் சம்ரி இப்ராஹிம் தனது தரப்பு வாதத்தில், தனது கட்சிக்காரர் தனது செயலுக்காக வருந்துவதாகவும், அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிப்பதாகவும், அவருக்கு இலகுவான தண்டனை வழங்குமாறு கோரியதாகவும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619