மஹா சிவராத்திரி 2026: இறையருள் பெருகும் மங்கல இரவு - மலேசிய பக்தர்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டி

16 பிப்ரவரி 2026, 9:19 AM
மஹா சிவராத்திரி 2026: இறையருள் பெருகும் மங்கல இரவு - மலேசிய பக்தர்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டி

கோலாலம்பூர் பிப்ரவரி 16: நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் நேற்று மஹா சிவராத்திரி விழாவை மிகுந்த பக்தியுடனும், ஆன்மீக எழுச்சியுடனும் கொண்டாடினார்கள்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த உன்னதமான இரவு, "சிவராத்திரி" அல்லது "சிவனுக்குரிய இரவு" என்று அழைக்கப்படுகிறது.

மங்கலத்தையும் நன்மைகளையும் வாரி வழங்கும் சிவபெருமானை போற்றும் வகையில், மலேசியாவில் ஜாலான் மாரோப் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரார் ஆலயம், பண்டார் பாரு சொந்துல் ஸ்ரீ ஆதிஸ்வரார் ஆலயம்,

பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் உள்ள சிவன் சந்நிதி மற்றும் பல சிவாலயங்களில் நேற்று சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த புனிதமான தினத்தின் பின்னணியில் பல உன்னதமான புராணக் கதைகள் மறைந்துள்ளன.ஒரு முறை பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, இறைவன் ஒரு பிரம்மாண்ட நெருப்புத் தூணாக (லிங்கோத்பவர்) காட்சியளித்து அவர்களின் ஆணவத்தை அடக்கிய இரவு இதுவாகும்.

மேலும், தேவர்களையும் அசுரர்களையும் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக ஜீவன்களை காத்து அருளிய நாள் இதுவாகும்.

இதனால், இந்நாளில் சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது 'ஜாகரணம்' எனப்படும் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது மற்றும் 'உபவாசம்' எனப்படும் விரதம் இருப்பது ஆகும்.

இந்நாளில் பக்தர்கள் அன்ன ஆகாரத்தைத் தவிர்த்து, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து மனதை ஒருமுகப்படுத்துகின்றனர்.

குறிப்பாக, இந்த இரவு நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலத்திலும் தனித்துவமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஜாமத்தில் பால்  இரண்டாம் ஜாமத்தில் தயிர், மூன்றாம் ஜாமத்தில் நெய் மற்றும் நான்காம் ஜாமத்தில் தேன் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும் புராண குறிப்பின் படி, முதலாம் கால பூஜை ஆனது பிரம்ம மற்றும் சரஸ்வதியாலும், இரண்டாவது கால பூஜை விஷ்ணு மற்றும் லக்ஷ்மியாலும், முன்றாம் கால பூஜை அம்பிகையாலும், இறுதியாக நான்காம் கால பூஜையானது தேவர்களாளும் பூஜிக்க படுகிறது.

இந்த நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்பது ஒரு ஆண்டு முழுவதும் சிவனை வழிபட்ட புண்ணியத்தை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.

மலேசியத் தமிழ் மக்கள் இந்த நன்னாளில் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவனின் அருளைப் பெறுகின்றனர்.

உடல்நலம் மற்றும் மன அமைதிக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதம், பக்தர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கமான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619