சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு முற்றாக நிறுத்தம்: சுல்தானின் ஆணைக்கு மாநில அரசு இணக்கம்

12 பிப்ரவரி 2026, 8:43 AM
சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு முற்றாக நிறுத்தம்: சுல்தானின் ஆணைக்கு மாநில அரசு இணக்கம்

ஷா ஆலம், பிப் 12 – சிலாங்கூர் மாநிலத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களின் கட்டளையை மாநில அரசு முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.

இம்மாநிலத்தில் நிலவி வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சமூக உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, பன்றிப் பண்ணைகளை மூடுவதற்கான அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது என்று மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தார். 

மாநில நிர்வாகக் குழுவின் (MMKN) சமீபத்திய முடிவின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலே புதிய பன்றி வளர்ப்பு உரிமங்களை வழங்கும் நடைமுறை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களிலும் எக்காரணம் கொண்டும் புதிய உரிமங்கள் வழங்கப்படமாட்டாது என மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் பன்றி வளர்ப்புத் துறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் பண்ணைகளை மாநில கால்நடை மருத்துவத் துறையுடன் இணைந்து படிப்படியாகவும், அதே சமயம் விரைவாகவும் மூடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுற்றுச்சூழல் மாசு, ஆறுகளின் தூய்மைக்கேடு மற்றும் துர்நாற்றம் குறித்த பொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, இந்தப் பண்ணைகளை மூடும் காலக்கெடுவை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

உள்ளூர் பண்ணைகள் மூடப்படுவதால் ஏற்படும் பன்றி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்ய, முழுமையாக இறக்குமதி முறையை நாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த இறக்குமதிச் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட தொழில்துறையினரால் மேற்கொள்ளப்படும். இருப்பினும், இதற்கான இறக்குமதி உரிமங்களை வழங்குவது கூட்டரசு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்க்கமான முடிவு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், நீர்வளம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டதாகும். புக்கிட் தாகார் போன்ற பகுதிகளில் இத்தகைய பண்ணைகளை அமைப்பது சமூக ஒற்றுமைக்குச் சவாலாக அமையும் என்பதால், மாநிலத்தின் அமைதியைப் பேண இதுவே சிறந்த வழிமுறை என மாநில அரசு கருதுகிறது என்று அவர் சொன்னார். 

இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பான தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, சிலாங்கூரின் பல்லின மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுல்தானின் ஆணையை மதித்து, ஒருமித்த கருத்துடன் செயல்படுவதன் மூலம் மாநிலத்தின் அமைதியைப் பாதுகாக்க முடியும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619