செர்டாங், 17 நவம்பர்- ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புளூ வாட்டர் தோட்டத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த இளம் இந்திய பெண் தொடர்பாக, நாளை இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர் முகமது ஃபாரித் அஹ்மத் இதை உறுதி செய்தார்.
சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப் பட்டவருக்கும் சந்தேக நபர்களுக்கும் சொந்தமான பல தனிப்பட்ட பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் உடைகள் உட்பட, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. விசாரணை ஆவணங்கள் சிலாங்கூர் மாநில பொது வழக்குரைஞர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, அந்த இரண்டு ஆண்களை குற்றம் சாட்டும் உத்தரவு கிடைத்துள்ளது. 20 வயதுடைய உள்ளூர் ஆண்கள் இருவரும், கொலைக்கான பிரிவு 302 மற்றும் ஒருங்கிணைந்த பிரிவு 34 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கு ஆளாக உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு காலை 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.








