கோலாலம்பூர், செப். 10 - நாட்டின் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது இந்திய சமூகத்தினரிடையே மனச்சோர்வு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல்பருமன் ஆகியவை அதிகளவில் காணப்படுவதாக தேசிய சுகாதார மற்றும் நோய் நிலவர ஆய்வு (NHMS) 2023 தெரிவித்துள்ளது.
இந்திய சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் மத்தியில் சுமார் 84,598 பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் சராசரியான 4.6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது தெரிவித்தார்.
மேலும் நீரிழிவு நோய் இந்தியர்களிடையே 26.4 சதவீதம் பதிவாகியுள்ளனர். இது தேசிய அளவிலான 15.6 சதவீதத்தை விட அதிகம் என்று சுட்டிக்காட்டினார். உயர் இரத்த அழுத்தம் சுமார் 394,121 பேர் இடையெ காணப்பட்ட நிலையில், இது தேசிய சராசரியான 29.2 சதவீதத்துடன் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
இந்தியர்களிடையே உடல்பருமன் பிரச்சனை சுமார் 28.6 சதவீதம் அதாவது 334,320 பேர் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் 21.8 சதவீதத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இதனுடன், 449,155 இந்தியர்களிடையே ஹைப்பர்கொலஸ்டெரோலீமியா (Hypercholesterolemia) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுமார் 379,667 இந்திய முதியவர்களிடையே அதிக உடல் எடை பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் மனநல பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க, அரசு மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த முறையில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த முயற்சிகள் அனைத்து மலேசியர்களுக்கும், இன பேதமின்றி, குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கும் கிடைக்கும் என்றார் அவர். குறிப்பாக தொற்றா நோய்கள் மற்றும் மனநல பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் இந்தியர்களுக்கு இந்த உதவிகள் முக்கியமானவை என்று செனட்டர் டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலுவின் கேள்விக்கு எழுத்து வடிவில் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.