செகமட், செப். 10 - சுமார் 400,000 வெள்ளி மதிப்புள்ள பசுக்களை விநியோகிப்பது தொடர்பான போலி பணக்கோரிக்கை வழக்கு விசாரணையில் உதவுவதற்காக மூன்று அரசு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் இம்மாதம் 15 வரை ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை சிகாமட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜோகூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) விசாரணை அதிகாரி சமர்ப்பித்த விண்ணப்பித்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் ரஹிமா அப்துல் மஜித் இந்த தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
வாக்குமூலம் அளிக்க நேற்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சிகாமட் எம்.ஏ சி.சி. அலுவலகம் வந்த போது முப்பது முதல் 60 வயதுக்குட்பட்ட ஒரு பெண் மற்றும் நான்கு ஆடவர்கள் அடங்கிய அந்த ஐந்து சந்தேக நபர்களும் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர்.
ஜோகூரில் உள்ள இரண்டு சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு பசுக்களை வழங்குவதற்கான பணக் கோரிக்கைகள் தொடர்பான தவறான பொருள் விவரங்களைக் கொண்ட ஆவணங்களைச் சான்றளித்து சமர்ப்பித்ததன் மூலம் அவர்கள் மோசடிக்கு உடந்தையாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும் அந்த பசுக்களின் விநியோகம் நடைபெறவேயில்லை.
நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அனைத்து சந்தேக நபர்களும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த குற்றத்தை செய்ததாக நம்பப்படுகிறது என வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜோகூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் ஹைருசாம் முகமது அமீன்@ஹமிமைத் தொடர்பு கொண்டபோது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்
பசு விநியோகம் தொடர்பில் போலி பணக் கோரிக்கை- அரசு ஊழியர்கள் உள்பட ஐவருக்கு தடுப்புக் காவல்
10 செப்டெம்பர் 2025, 9:38 AM