மலாக்கா, செப். 10 - ஆயர் குரோவில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவரை கடத்த முயன்றதாகப் பள்ளியின் வாட்ஸ்அப் குழு மூலம் வைரலாகப் பரவிய தகவல், தவறான புரிதல் காரணமாக உண்டானது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பள்ளி வளாகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத பெண்ணுடன் அந்த ஒன்பது வயது மாணவரைத் தாம் கண்டதாக அவரின்
தாயாரிடம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் ஓட்டுநர் தெரிவித்ததால் இந்த தவறான புரிதல் ஏற்பட்டது என்று மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
இந்தத் தகவல் கேஷியராக பணிபுரியும் 28 வயதுடைய அம்மாணவனின் தாயாருக்குத் தவறான புரிதலையும் கவலையையும் ஏற்படுத்தியதோடு தனது மகனை கடத்த முயற்சி நடந்ததாகக் கருதி அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றதாக கிறிஸ்டோபர் கூறினார்.
அதேசமயம், தனது மகனின் பள்ளி வாட்ஸ்அப் குழுவில் இந்த கடத்தல் முயற்சி தொடர்பான அறிக்கையை அல்லது அறிவிப்பைக் கண்ட அங்காடி வணிகரான 44 வயதுடைய பெண் இந்த விவகாரத்தில் தமது பெயரும் சம்பந்தப்பட்டுள்ளது கண்டு நேற்று மாலை 4.27 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில் தனது 11 வயது மகனை அழைத்து வர பள்ளிக்குச் சென்றிருந்ததாகவும் அந்த மூன்றாம் ஆண்டு மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறும்போது தற்செயலாக அவனுடன் நடந்து சென்றதாகவும் அந்த அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்பதும் தவறான புரிதல் காரணமாக இரண்டு பெண்களும் ஆயர் குரோ காவல் நிலையத்திற்கு வந்ததும் காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தல் இல்லாமல் எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் கருத்துகளை அல்லது ஊகங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மாணவரை கடத்த முயற்சியா? அது தவறான புரிதலே!- போலீஸ் விளக்கம்
10 செப்டெம்பர் 2025, 9:16 AM