ஈப்போ, செப். 10 - இங்குள்ள ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷாவில் உள்ள ஒரு தளவாடப்பொருள் கடைக்கு முன்னால் இன்று காலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தோடு அவரது மனைவி காயங்களுக்குள்ளானார்.
இந்த விபத்து குறித்து காலை 8.06 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாபியா கூறினார்.
டோயோட்டா கொரோலா ஆல்டிஸ் கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 55 வயது ஆடவர் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மலேசிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 48 வயது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தி காரில் சிக்கியவர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட வேளையில் காலை 8.53 மணிக்கு இந்த நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது என்றார் அவர்.
கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது - கணவர் மரணம், மனைவி காயம்
10 செப்டெம்பர் 2025, 8:18 AM