கோலாலம்பூர், செப். 10 - கட்டார் தலைநகர் டோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த தன்மூப்பான நடவடிக்கை கட்டாரின் இறையாண்மையின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்பதோடு கடுமையான சர்வதேச சட்ட
மீறல் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலைநகர் மீதான அத்துமீறிய தாக்குதலாகும். மேலும் ஏற்கனவே சிக்கலில் உள்ள இந்த பிராந்தியத்தில் இது பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் சமரசம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு மையமாக இருக்கும் நாடான கட்டாரை குறிவைப்பது அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது.
இந்த தாக்குதல் முற்றிலும் நியாயப்படுத்த முடியாததோடு ஏற்றுக்கொள்ளவும் முடியாதது. மலேசியா கட்டாருடன் உறுதியாக நிற்கிறது. மேலும், இந்த மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகச் சமூகம் உறுதி செய்ய வலியுறுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
டோஹாவில் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கட்டார் கடுமையாக கண்டித்தது.
இது சர்வதேச சட்டம் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதோடு கட்டார் குடிமக்கள் மற்றும் பிற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக கட்டார் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.