ஷா ஆலம், செப். 10 - மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் மூலம் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு கடந்த 2023 முதல் 82 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
அக்குடும்பங்களின் அடிப்படைச் செலவுகளை ஈடு செய்வதற்கும் அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் மித்ராவின் பரம ஏழ்மை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படுவதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த குடும்பங்கள் உடனடி நிவாரணம் பெறுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தேசிய வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் வழங்கிய அவர் நேற்றைய தேதியிட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் அவர் கூறினார்.
இந்திய சமூகத்தில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மித்ராவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, பல்வேறு முயற்சிகள் பிற அமைச்சுகள் வழி செயல்படுத்தப்பட்டு வருகின்றன அவர் மேலும் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் உள்ள நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டமும் இதில் அடங்கும். பொருளாதார வலுவூட்டல் நடவடிக்கைகள், வீடுகளை பழுதுபார்ப்பது மற்றும் புதிய வீட்டுடைமைத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றை இது வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிதியமைச்சின் ரஹ்மா ரொக்க உதவி (எஸ்.டி.ஆர்.) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவி திட்டம் (சாரா) மூலம் நேரடி உதவியை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மூலம் சமூக நல ஆதரவும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
கடந்த ஜூலை 31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 13வது மலேசியா திட்டத்தில், மலேசிய இந்திய பெருந்திட்டம் (ப்ளூபிரிண்ட்) மற்றும் இந்திய சமூக செயல் திட்டத்தின் முன்னெடுப்புகள் மூலம் இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ரமணன் கூறினார்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்) மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (திவேட்) ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, வீட்டுவசதியை மேம்படுத்துவது, தொழில்முனைவோரை வலுப்படுத்துவது, சமூக நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பது ஆகியவை பிற முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்திய சமூகத்தில் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு வெ.82 லட்சம் ஒதுக்கீடு - ரமணன் தகவல்
10 செப்டெம்பர் 2025, 6:48 AM