கோலாலம்பூர், செப். 10 - சமூக ஊடக கட்டுப்பாட்டிற்கு எதிராக கடந்த திங்கள் அன்று நேபாளத்தில்
வெடித்த பெரிய அளவிலான போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் மலேசியர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அதே வேளையில் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் எப்போதும் சமீபத்திய தகவல்களைப் பெறும்படி விஸ்மா புத்ரா என அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் மலேசியர்களை வலியுறுத்தியது.
இதுவரை மலேசியர்கள் யாரும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியது.
சமூக ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து காட்மாண்டுவில் வன்முறை அதிகரித்தது. இதன் விளைவாகக் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.
காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு நேபாளத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதோடு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அந்நாட்டில் தங்கள் இருக்கும் விஷயத்தை இன்னும் பதிவு செய்யாதவர்கள் உதவி மற்றும் தகவல் தொடர்புகளை உடனடியாக பெறுவதை உறுதிசெய்ய, E-Konsular ( https://ekonsular.kln.gov.my ) வழியாக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று விஸ்மா புத்ரா கூறியது.
தூதரக உதவிக்கு காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தை Bakhundole-3, Lalitpur, Nepal என்ற முகவரியில் அல்லது +977-1-5445680 என்ற தொலைபேசி மூலமாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் .
நேபாளத்தில் போராட்டம் - எச்சரிகையுடன் இருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து
10 செப்டெம்பர் 2025, 3:07 AM