ஷா ஆலம், செப். 9 - அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு லெம்பா ஜெயா தொகுதி இதுவரை 1,700 விண்ணப்பங்களை பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்காக லெம்பா ஜெயா தொகுதிக்கு 400 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் நான்கு மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்களை தாங்கள் பெற்றுள்ளதாக தொகுதி இந்திய சமூகத் தலைவர் ஆர். விஜயன் கூறினார்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த 2ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 1,700 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள 400 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.
கடந்தாண்டு இத்திட்டத்திற்கு 1,850 விண்ணப்பங்கள் கிடைத்த வேளையில் தேர்வு செய்யப்பட்ட 400 பேர் தவிர்த்து மற்றவர்களுக்கு அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் வாயிலாக உதவிப் பொருள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் அவர்.
இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தில் அனைவரும் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக ஐந்து முறைக்கும் மேல் பயன் பெற்றவர்களுக்கு
இம்முறை வாய்ப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கும் நிகழ்வு வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அம்பாங், ஜெயண்ட் பேரங்காடியில் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமது அப்துல் ரஹ்மான அல்ஹாடாட் தலைமையில் நடைபெறும் என விஜயன் கூறினார்.
இவ்வாண்டு தீபாவளிக்காக 44 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி செலவில் தலா 200 வெள்ளி மதிப்பிலான 22,150 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு 56 தொகுதிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது.
தீபாவளி பற்றுச் சீட்டுக்கு லெம்பா ஜெயா தொகுதியில் 1,700 விண்ணப்பங்கள்
9 செப்டெம்பர் 2025, 9:42 AM