ad

போலி கடப்பிதழ் கும்பல் முறியடிப்பு - ஐந்து வங்காளதேசிகள் கைது

3 செப்டெம்பர் 2025, 10:39 AM
போலி கடப்பிதழ் கும்பல் முறியடிப்பு - ஐந்து வங்காளதேசிகள் கைது

புத்ராஜெயா, செப். 3 - கோலாலம்பூரில் உள்ள ஜாலான் ஜெலாவாட் மற்றும் ஜாலான் ரசாக் மேன்ஷன் ஆகிய  இடங்களில் மலேசிய குடிநுழைவுத் துறை நேற்று  மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் போலி பயண ஆவணக் கும்பல் முறியடிக்கப்பட்டது.

புத்ராஜெயா குடிநுழைவு தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த பல்வேறு தரநிலை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழு  மூன்று வாரமாக மேற்கொண்ட
உளவு நடவடிக்கையின் விளைவாக காலை 9.40 மணிக்கு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

இந்தச் சோதனையில் 19 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து வங்கதேச ஆடவர்களை நாங்கள் கைது செய்தோம். அவர்களில் இருவர்
அக்கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது என அவர் இன்று சிறப்பு நடவடிக்கை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அவர்களில் மூவருக்கு கட்டுமானத் துறையின் கீழ் தற்காலிக பணி வருகை அனுமதிச் சீட்டுகளும் (பி.கே.எல்.எஸ்.)  ஒருவருக்கு மாணவர் அனுமதிச் சீட்டும் இருப்பது ஆரம்ப கட்டச் சோதனையில் தெரிய வந்தது.

எனினும், மற்றொரு ஆடவருக்கு  செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு ஆவணங்கள் மற்றும் உபகரணங்களையும் தாங்கள் கைப்பற்றியதாக ஜக்காரியா கூறினார்.

எட்டு வங்காளதேச கடப்பிதழ்கள், ஒரு இந்திய கடப்பிதழ், மூன்று போலி வங்காளதேச கடப்பிதழ்கள், நான்கு போலி இந்தோனேசிய கடப்பிதழ்கள் இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சோதனையில் ஒரு கணினி, ஒரு பிரிண்டர், பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் பக்கங்கள், பாஸ்போர்ட் கவர்கள், மை, வெட்டும் உபகரணங்கள், 11 கைப்பேசிகள், 2,100  வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு  பெரேடுவா அருஸ் வாகனம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.