கோலாலம்பூர், செப். 3 - சாரா எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று தினங்களில் நாடு முழுவதும் 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 19 கோடியே 24 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்களை வாங்கியுள்ளனர்.
சாரா உதவித் திட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று மிக அதிகமாக அதாவது 11 லட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
நேற்றிரவு 10.30 மணி நிலவரப்படி கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி இந்த எண்ணிக்கை 5 கோடி வெள்ளியாக இருந்தது.
அதே சமயம் கடந்த 31ஆம் தேதி 79 விழுக்காடாக இருந்த பரிவர்த்தனை அளவு நேற்று 95 விழுக்காடாக ஏற்றம் கண்டது என அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி அதிகப்படியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதால் மைகாசே செல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது.
இக்காலக்கட்டத்தில் நிமிடத்திற்கு 2,000 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 540ஆக மட்டுமே இருந்தது என அது கூறியது.
முன்பு உச்ச நேரத்தில் பதிவானதை விட இப்போது நான்கு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. செயல்பாடு சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு நிமிட பரிவர்த்தனை ஆற்றலின் அளவு 5,000லிருந்து 15,000 ஆக அதிகரிக்கப்பட்டது என அது தெளிவுபடுத்தியது.
சாரா உதவி நிதி பெறுநர்களிடமிருந்து கிடைத்து வரும் அபரிமித ஆதரவுக்கு நிதியமைச்சு நன்றி தெரிவித்துக் கொண்டது.
செயல்முறை திறன்மிக்கதாகவும் வாடிக்கையாளர் நட்புறவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் மக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் வழிகாட்டியாகக் கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்தது.
இந்த சாரா 100 வெள்ளி உதவித் தொகையை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள பதிவு பெற்ற 7,300 வர்த்தக வளாகங்களில் பொருள்களை வாங்கலாம்.