கோலாலம்பூர், செப். 1- சாரா எனப்படும் ரஹ்மா அடிப்படை நன்றி உதவித் திட்டத்தின் முதல் நாளான நேற்று இரவு 9.30 மணி வரை சுமார் 850,000 பேர் கிட்டத்தட்ட ஐந்து கோடி வெள்ளி மதிப்புள்ள பொருள்களை வாங்கினர்.
சாரா நன்றி திட்ட பயனாளிகள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக அதன் கணினி முறை அதிகப்படியான பரிமாற்றங்களைப் பதிவு செய்ததாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
இத்தகைய அதிகப்படியான பரிமாற்றங்கள் காரணமாக மைகாசே ஒருங்கமைப்பினால் கையாளப்படும் கட்டணம் செலுத்தும் முனைய முறையின் அடைவு நிலை ஒரு சில இடங்களில் பெரிதும் சரிவு கண்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கணினி முறையின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொண்டு பரிசீலிக்க இயலும் என்று அது தெரிவித்தது.
இன்று செப்டம்பர் முதல் தேதி சாரா வாயிலாக கொள்முதல் நடவடிக்கைகளை மக்கள் சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக செயல் முறையின் ஆற்றலை நிதியமைச்சும் மைகாசேவும் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
பயனீட்டாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு தாங்கள் மன்னிப்பு கோருவதோடு இந்த உதவித் திட்டம் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய தாங்கள் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டது.
நேற்று பதிவான பரிவர்த்தனை இதற்கு முன்னர் அதாவது ஆகஸ்டு 30க்கு முன்பாக பதிவானதை விட மிக அதிகமானது. மாதாந்திர சாரா திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரி 600,000 பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன.
சாரா நன்றித் திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே 100 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கும் மேற்பட்ட 2.2 கோடி மலேசியர்களின் மைகார்ட்டில் அந்த தொகை வரவு வைக்கப்படும்.