ஜாகர்த்தா, செப். 1- இந்தோனேசியாவில் நிகழ்ந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஐவர் பலியான வேளையில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் சிலவற்றை மீட்டுக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படி சம்பளம் மற்றும் வீட்டு அலவன்ஸை ஆட்சேபித்து மக்கள் கடந்த திங்கள்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் போலீஸ் கவச வாகனத்தால் மோதப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து கலவரம் பெரிய அளவில் வெடித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட கலவரக்காரர்கள் அங்கிருந்த பொருள்களைச் சூறையாடியதோடு வீடுகளுக்கு தீயிட்டனர்.
அரசியல் தலைவர்கள் புடைசூழ அதிபர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் பிராபாவோ வன் முறையாளர்கள் மற்றும் பொருள்களை கொள்ளையிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி இராணுவம் மற்றும் காவல் துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
அவர்கள் புரியும் செயல்கள் பயங்கரவாதம் மற்றும் தேசத் துரோகத்திற்கு இணையானது என அவர் வர்ணித்தார்.
இதனிடையே, தங்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் மற்று வெளிநாடுகளுக்கான பணி நிமித்தக் காலத்தை குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதாக அதிபர் கூறினார்.
பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களில் கொள்ளையிடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி இராணுவம் மற்றும் காவல் துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.