தமிழர்களின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பிரிக்க முடியாத பிணைப்பாக இருந்து வருபவை பாடல்களாகும்.
பிறப்புக்கு தாலாட்டு, இறப்புக்கு ஒப்பாரி, திருமணத்திற்கு நலங்கு பாட்டு, கொண்டாட்டத்திற்கு கும்மிப் பாட்டு, கடவுளுக்கு பக்திப் பாட்டு என அனைத்து வித நிகழ்வுகளையும் அதன் உணர்வுகளையும் பாடலாக வடிக்கும் பக்குவம் நம் முன்னோர்களுக்கு இருந்தது.
உழைப்பதற்காக வார்க்கப்பட்ட, உழைப்புக்கு வாழ்க்கைப்பட்ட தமிழர்களுக்கு உடல் வலி, மன வலி போக்கும் அருமருந்தாக விளங்கியவை இத்தகைய நாட்டுப்புற பாடல்கள்தான்.

பசுமையான எதிர்காலக் கனவுகளோடு மலையகம் நோக்கி கப்பல் ஏறிய தென்னகத் தமிழர்களோடு இந்த நாட்டுப்புறப் பாடல்களின் பயணமும் தொடங்கியது.
இந்நாட்டிற்கு வந்து பால் மரக்காடுகளில் கால் பதித்த போதுதான் "நமது வலி இன்னும் மறையவில்லை, அதன் வடிவம் மட்டும்தான் மாறியுள்ளது" என்பதை நம் மக்கள் உணர்ந்தார்கள்.
வலி, கவலை ஏமாற்றம், ஆதங்கம், அழுகை, ஆற்றாமை என அனைத்து உணர்வுகளையும் வார்த்தைகளில் வடித்து "நிரை"களுக்கு மத்தியில் உச்சஸ்தாயில் அவர்கள் பாடிய பாடல்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஒரு இளைஞர்.
தோட்டத் தொழிலாளர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஒரு ஆவணப் படத்தை "ஆராரோ ஆரிரரோ" எனும் தலைப்பில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த இளைஞரின் பெயர் கோகுலராஜன் ராஜேந்திரன்.
எளிய தோற்றம், எப்போதும் வேட்டி, அதிராதப் பேச்சு, மாறாத புன்னகை, உச்சந்தலையில் குடுமி, முகத்தில் தாடி, என சமகால சமூகத்தின் சராசரி அடையாளங்களைத் துறந்து ஒரு தத்துவார்த்த நபராக தனித்து காட்சியளிக்கிறார் 32 வயதான கோகுலராஜன்.

மலாயா பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலைத் துறையில் பட்டம் பெற்றவரான அவர், 2024 ஆம் ஆண்டு கேன்ஸ் டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'வாலே பாலே' குறும்படத்தின் இணை இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.
"ஆராரோ ஆரிரரோ" என்பது நாட்டுப்புற பாடல்கள் கொண்ட ஒரு ஆவணப்படம். இது பாரம்பரியத்தின் வேர்களைத் தேடும் ஒரு விழுதின் முயற்சி.
ஒரு மலேசியனாக நான் யார்?என்ற தேடல் தான் இந்த ஆவணப்படம் எனக் கூறுகிறார் கோகுல ராஜன்.
மலேசியாவில் சுதந்திரத்திற்கு முன்னதாக வசித்த தோட்டத் தொழிலாளர்கள் பாடிய பாடல்கள் மூலமாக அவர்களின் வரலாற்றையும் பட்ட வலிகளையும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
தமிழர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கு முந்தைய வரலாற்றை எடுத்துக் கொண்டால் பிரிட்டிஷ் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களாக இங்கு வந்து இறங்கிய 100 வருடத்திற்கு முந்தையப் பயணத்தைக் கூறலாம்.
இந்த 100 வருட வரலாற்றின் போதுதான் இந்த நாட்டைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அந்நியமாக இருந்த இந்த நாடு நமக்கு அணுக்கமாக ஆனது இக்காலகட்டத்தில்தான்.
அதே சமயம், தோட்டத்தை விட்டு ஓடி விட வேண்டும் எனும் அளவுக்கு வாழ்வு துன்பம் நிறைந்ததாக இருந்ததும் அங்குதான்.
இந்த 100 வருட வரலாற்றின் ஆவண வடிவம் அடர்த்தி குறைந்ததாகத்தான் இருக்கிறது நமது அனுபவங்கள், போராட்டங்கள் போன்ற சம்பவ ரீதியான படைப்புகள் நிறைய உள்ளன. ஆனால், உணர்வுகளை பிரதிபலிக்கும் வரலாற்றுப் படைப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
நாட்டுப்புற பாடல்களை எடுத்துக் கொண்டால் அடிப்படையில் எல்லாமே வலிதான். அதையும் தாண்டி வாழ்க்கையின் எல்லா சூழல்களையும் இப்பாடல்கள் பிரதிபலிக்கின்றன. பசி, காதல், தாலாட்டு, ஒப்பாரி, தொழில் நையாண்டி, பெண்களுக்குள் நடக்கும் சண்டை, கள்ளுக்கடை, கிராணி மற்றும் கங்காணிகளின் பாலியல் தொல்லை என பல்வேறு உணர்வுகளையும் சூழல்களையும் உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்த தொகுப்பு அமைந்துள்ளது.
இதில் காணப்படும் உரிமைப் போராட்டப் பாடல்கள் நாம் கிடைப்பதை பெற்றுக் கொண்டுச் செல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் போராடியிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன என்கிறார் கோகுலராஜன்.
இந்த நாட்டுப்புறப்பாடல் ஆவணப்படத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சுமார் 70 தோட்டத் தொழிலாளர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பேட்டி கண்டோம். ஆவணங்களை சேகரித்தோம். எனினும், அவர்கள் வழங்கிய விஷயங்கள் போதுமானதாக இல்லை.
அதன் பின்னர்தான் மலாயா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மறைந்த டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள் சேகரித்த நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு கிடைத்தது.

அதில் ஒரு பாடல் இப்படி ஒலிக்கிறது
"பாலு மரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறி வந்தோம்
நாப்பத்தஞ்சு காசு போட்டு
நட்டெலும்ப கழட்டுறானே
முப்பத்தஞ்சு காசு போட்டு
மூக்கெலும்ப கழட்டுறானே.”
இவை மிகவும் சாதாரணமான வரிகள்தான். ஆனால், அழுத்தமான உருக்கமான வலியை தரக்கூடியவை. இதில்தான் முன்னோர்கள் பற்றிய எனது தேடலுக்கான விடை கிடைத்தது.
அந்த புத்தகத்தில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் தண்டாயுதம் 80 ஆம் ஆண்டுகளில் தரவுகளை சேகரித்த போது தோட்டங்களில் பாடல்களை பாட்டாளிகளை பாட வைத்து ஒலிப்பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த ஒலி நாடா கைக்கு கிடைக்காமல் போய்விட்டது.
ஆகவே, அந்த பாடல்களுக்கு மெட்டு என்னவாக இருந்திருக்கும் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடு பட்டேன். இந்த நோக்கத்திற்காக தஞ்சாவூரில் உள்ள நாட்டுப்புற பாடகர்களின் உதவியை நாடியுள்ளேன்.
எண்பது முதல் 90 நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த ஆவணப்படத்தில் 15 பாடல்களை இடம் பெறச் செய்யவிருக்கிறோம். தஞ்சாவூர் நாட்டுப்புற கலைஞர்களின் உதவியோடு சிலாங்கூர் மாநிலத்தின் புரூக்லண்ட்ஸ், சுங்கை சீடு, கெர்லிங் தோட்டம், கேரித் தீவு ஆகிய தோட்டங்களில் காட்சிகளை
படமாக்கவுள்ளோம்.

என் தந்தையும் அவரின் சகோதர சகோதரிகளும் பந்திங், புரூக்லண்ட்ஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆகவே. அவர்களிடம் இந்த பாடல்களை கொடுத்து பாட வைப்பது எனது நோக்கமாகும். ஏனென்றால், அவர்கள் பாட்டாளி வாழ்க்கையைத் தாண்டி வந்தவர்கள். அவர்களால் பாடல் வரிகளில் உள்ள வலிகளை நன்கு உணர்ந்து பாட முடியும்.
இந்த பாடல்களில் இசை பிரதானமாக இருக்காது. பாடகர்களின் குரல்தான் முதன்மையாக இருக்கும். அதோடு பறையும் இயற்கையான ஒலிகளாக பால் மரம் சீவும் போது எழும் சத்தம் உள்ளிட்ட தோட்டப்புற பின்னணியில் கேட்க க்கூடிய ஒலிகள் இதில் இடம் பெறும்.
இந்த ஆவணப் படத்தின் படபடிப்பை செப்டம்பர் இறுதியில் ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் இரண்டு வாரங்களில் படபிடிப்பை முடிப்பது எங்கள் திட்டம். படத் தொகுப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் அடுத்தாண்டு மார்ச் மாதவாக்கில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆவணப் படம் தயாரானவுடன் அதனை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவோம். பின்னர், மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யவிருக்கிறோம்.
இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைக்கிறது. வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கான தேவை எல்லோருக்கும் இருக்கிறது. பள்ளிகளில் இது சொல்லித் தரப்படுவதில்லை.

ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் போது அதற்கு பிற இனத்தினர் உள்பட அனைவரும் ஆதரவு தரும் முன்வருகின்றனர்.
இந்த ஆவணப் படத்தை எனது சகோதரர் குமணவண்ணன் ராஜேந்திரனின் ஓம் சக்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த ஆவணப்படத் திட்டத்திற்கு சுமார் 300,000 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது. அதில் 60 விழுக்காட்டு தொகை சேகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எஞ்சிய 40 விழுக்காட்டைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த திட்டத்திற்கு கிரிஷன் ஜிட் நிறுவனம் டோரோண்டோ பல்கலைக்கழகம், மைஸ்கில், கண்ணதாசன் அறவாரியம், தேசிய நில நிதி வாரியம், மை கிரியேட்டிவ், மாஹ்சா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.
வரலாற்றுப் படைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்கிறார் கோகுலராஜன்.