ஷா ஆலம், ஆக. 29- நாளை இரவு டத்தாரான் மெர்டேக்கானவில் நடைபெறும் மாநில அளவிலான 68வது தேசிய தின விழாவில் கலந்து கொள்ள சிலாங்கூர் மாநில மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு விடுத்துள்ளார்.
சீருடை படை உறுப்பினர்களின் அணிவகுப்பு போன்ற நடவடிக்கைகள் வாயிலாக சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்து ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு செய்திகளை இந்தக் கொண்டாட்டம் வெளிப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த கொண்டாட்டம் நாட்டின் மீதான நமது அன்பைக் புலப்படுத்துவதோடு அனைத்து விஷயங்களிலும் சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் வலிமையைக் காட்டுகிறது. இது மலேசியாவின் 68வது (தேசிய) பிறந்தநாளுடன் இணைந்த நமது மகிழ்ச்சியின் அடையாளமாகும் என அவர் சொன்னார்.
நீண்ட விடுமுறை மற்றும் இதர அம்சங்களைப் பொறுத்து 30,000 முதல் 50,000 பார்வையாளர்கள் இந்நிகழ்வுக்கு வருவார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்வையாளர்களின் எண்ணிக்கை பொதுவாக மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அணிவகுப்புகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 5,000 முதல் 6,000 பேரை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.
இன்று எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் தேசிய சொற்பொழிவு ஆற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படவிருக்கும் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கியமான செய்தியை வழங்குவதற்காக இந்த சொற்பொழிவு நிகழ்வு முதன் முறையாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு அனைத்து மாநில நிர்வாகத் தலைவர்கள், நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைத்ததாக அமிருடின் மேலும் கூறினார்.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக நான் சிறப்பு உரையை நிகழ்த்துவேன். ஆனால் வழக்கமாக அந்த நேரத்தில் அதிகமான மக்கள் தேசிய தினத்தை கொண்டாட வருவார்கள். எனவே இம்முறை நாங்கள் அதை இரண்டு நாட்களுக்கு முன்பே செய்கிறோம் என்றார் அவர்.
இன்றைய எனது செய்தி என்னவென்றால் வரும் 2057 ஆம் ஆண்டில் நாடு 100 ஆண்டுகளை எட்டுவதற்கான நாட்களை இப்போதே கணக்கிடத் தொடங்குங்கள் என்பதாகும். சிலாங்கூர் போட்டித்தன்மை மற்றும் பொருளாதார பங்களிப்பு கொண்ட ஒரு மாநிலமாகத் இருக்கத் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.