கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் - கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏழு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின் மூலம் எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய மின்னியல் சிகரெட்டுகளை விநியோகிக்கவிருந்த மோசடி கும்பலை போலீசார் முறியடித்தனர்.
அதோடு, 24-இல் இருந்து 34 வயதிற்குட்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள், பெண் ஒருவர் உட்பட தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் இதில் கைதானதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சுஸ் தெரிவித்தார்.
மூன்று கிலோகிராம் எடையிலான எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருள், 7.6 லிட்டர் அளவிலான மின்னியல் சிகரெட் திரவம் மற்றும் 39 லிட்டர் அளவிலான போதைப்பொருள் கலந்து திரவம் உட்பட சில விலை உயர்ந்த பொருள்களும் இச்சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டதாக டத்தோ ஃபடில் கூறினார்.
''அவர்கள் செயல்படும் இடம், சேகரிப்பு இடம் ஆகியவற்றை முற்றிலும் மறைவான இடங்களாக உள்ளன. பொதுமக்களுக்கு அணுகல் இல்லாத இடங்களாக உள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதி, ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை. உளவுத்துறை பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு தடையாக இருக்கும் வகையில் அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்,'' என்றார் அவர்.
கைதானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் யாரும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கு, 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39B-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.