கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 - முழுமைப் பெறாத மற்றும் கைவிடப்பட்டிருக்கும் 1,171 வீடமைப்புத் திட்டங்களை தனியார் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டப் பணிக்குழு (TFST) வெற்றிகரமாக சீரமைத்துள்ளது.
இப்பணிக்குழுவின் முயற்சியில், ஜி.டி.வி எனப்படும் ஒட்டுமொத்த வளர்ச்சி மதிப்பீட்டில், மொத்தம் பத்தாயிரத்து 13 கோடியே 55 லட்சம் ரிங்கிட் செலவில் 139,848 வீடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இக்குடியிருப்பு திட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான அண்மைய நிலவரம் குறித்து, மக்களவையில் வாங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
வீட்டுவசதி மேம்பாட்டாளர்களுக்கான 'கட்டமைத்து விற்கும்' கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் கைவிடப்பட்ட திட்டங்கள் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்றும் தனது தரப்பு இலக்கு வைத்துள்ளது என்று ஙா தெரிவித்தார்.
-- பெர்னாமா