ஷா ஆலம், ஆக. 27 - கோல குபு பாரு மிண்டா மேம்பாட்டுச் சங்கம், வட்டார சமூக அமைப்புகள் மற்றும் உள்ளுர் சமூகத்துடன் இணைந்து கபடி போட்டியை வார இறுதியில் நடத்தியது.
இப்போட்டியை கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இப்போட்டியில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த சுமார் 100 விளையாட்டாளர்கள் பங்கு கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வு கபடி விளையாட்டாளர்களிடையே உற்சாகத்தையும் விளையாட்டு உணர்வையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பாங் குறிப்பிட்டார்.
கபடி போட்டி தமிழர்களின் தனித்துவமிக்க பாரம்பரிய விளையாட்டாக மட்டுமின்றி, மனவுறுதி, கட்டொழுங்கு, போராட்ட உணர்வை விதைக்கும் கலையாகவும் விளங்குகிறது.
பல்லின மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வை பல்லின மக்களிடையே விதைப்பதிலும் முக்கிய பங்கினை ஆற்றுகிறது என்ற அவர் கூறினார்.
ஆரோக்கியமான, போட்டி ஆற்றல் கொண்ட மற்றும் ஒன்றுபட்ட தலைமுறையின் உருவாக்கத்திற்கு இத்தகைய விளையாட்டுகள் அடித்தளமாக விளங்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.