கிள்ளான் ஆக. 22 ;- மலேசிய இந்தியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கு பிரதமர் அன்வார் கைகளை வலுப்படுத்த வேண்டும். கடந்த 33 மாதங்களாக பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் நாட்டுக்கோ இந்தியர்களுக்கோ ஏதும் பெரிதாக சாதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டுகளை சில அரசியல் விஷமிகள் முன்வைத்து வருகின்றனர்.
பிரதமரின் மடாணி பக்காத்தான் அரசு பல இன குழுகளிடம் பெற்றுள்ள ஆதரவை சீரழிக்க எந்த எல்லைக்கும் போக அந்த அரசியல் விஷமிகள் தயங்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஆனால் எந்த இனத்தையும் தனிப்பட்டு குறிப்பிடாமல் எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பாக இந்தியர்களுக்கும் மற்ற ஏழைகளுக்கும் உதவும், பல பயனான திட்டங்களை பிரதமரின் பக்காத்தான் மடாணி அரசு முன்னெடுத்து வருகிறது என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
இந்தியர்களுக்கு இன ரீதியாக தனி கட்சி கொண்டிருந்தோம், தனி அமைச்சர்களையும் கொண்டிருந்தோம். ஆனால் கல்வியில் பின்தங்கும் இந்திய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவ பாலர் பள்ளிகளின் தேவையை 60 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கி சுமார் 60 ஆண்டுகள் வற்புறுத்தினோம் பல முறை அதற்கான கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால் அது பெரிய அரசாங்க ஒதுக்கீட்டுடன் ''கிமாஸ் பாலர் பள்ளி'' திட்டத்தின் கீழ் நாட்டில் மற்ற மொழிகளுக்கு திணிக்கப்பட்டன, தமிழ் பள்ளிகளுக்கு மட்டும் பாலர் பள்ளிகள் ஏன் எட்டாக் கனியானது? ஏழைகளுக்கு மட்டும் ஏன் கனவாகவே இருந்தது?

ஆனால் இப்பொழுது பக்காத்தான் மடாணி அரசு அறிவித்துள்ள அடுத்து வரும் 13வது மலேசியத் திட்டத்தில் எல்லா பள்ளிகளுக்குமான கல்வி திட்டத்தில் பாலர் பள்ளிகளும் உட்படுத்தப் பட்டுள்ளது.
அடுத்து இந்திய சமுதாயத்தில் கல்வியை இடையில் கைவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம், அந்த குறையை போக்க இதற்கு முன் இருந்த அரசுகள் என்ன செய்தன? அரசாங்கத்தில் அன்றைய இந்திய அமைச்சர்கள், இந்திய பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஆனால், இப்பொழுது கட்டாய இடைநிலைக் கல்வி சட்டத்தையும் இந்த பக்காத்தான் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இது நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க, கல்வி கற்பதை உறுதிபடுத்துகிறது. ஆனால், பல அரசியல் மேதாவிகளின் கண்களுக்கு இது போன்ற உன்னத, லட்சியகரமான, நீண்டகால செயல்திட்டங்கள் தெரியவில்லை.
மலேசியாவின் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில் 5 ஆண்டுகளில் மூன்று பிரதமர்களையும் நூற்றுக்கணக்கான அமைச்சர்களையும் இந்நாடு கண்டது.

அந்த காலக் கட்டத்தில் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புகளை மக்கள் இழந்தனர், விலைவாசிகள் உயர்ந்தன, மக்களின் அன்றாட வாழ்வுக்கான உணவு பொருட்களுக்கு கூட பஞ்சம் ஏற்பட்டிருந்தது.
இன்று நாட்டிற்கு மிகவும் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்குவதில் அன்வார் வெற்றிப் பெற்றுள்ளார். அவரது அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் ஒரு வலுவான பொருளாதார செயல் திறனை கட்டமைத்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.1% ஐ எட்டியது, மேலும் பங்குச் சந்தை மற்றும் ரிங்கிட் ஆகிய இரண்டும் ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்டு உள்ளதை சர்வதேச ஊடகங்களும் பாராட்டுகின்றன.
நாட்டு நிர்வாகத்தை பக்காத்தான் ஏற்றபோது நாட்டில் அரிசி பற்றாக்குறை, கோழி பற்றாக்குறை, முட்டைக்கு கூட பற்றாக்குறை இதனால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தது. ஆனால் இன்று நிலை மாறி மலேசியா முட்டைகளை ஏற்றுமதி செய்கிறது.

விலைவாசிகள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு அதேவேளையில் நாட்டின் தொழிலாளர்களின் ஊதியம் 1700 வெள்ளியாக உயர்த்தியுள்ளார்.
நஜிப் காலத்தில் 2012ம் ஆண்டு அங்கீரிக்கப்பட்ட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கான வாக்குறுதிகள் ஏன் மூன்று பிரதமர்களினால் நிறைவேற்ற முடியவில்லை, இப்பொழுது எப்படி அந்த தமிழ்ப்பள்ளிகள் நிறைவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளை கூட கட்டி முடித்து ஒப்படைக்கும் கடப்பாடு, திறன் அற்றவர்கள், இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்த போகிறார்கள்? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மித்ரா பற்றி மட்டும் பேசும் அரசியல் பெருச்சாளிகள் , அவர்கள் மித்ராவை நிர்வகித்த காலத்தில் மித்ராவை நடத்திய லட்சணம் நாடறியும்.

முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் அவர் வழங்கிய ''பிரிம் '' உதவித் தொகைக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஜி.எஸ் டி வரியை செலுத்தினர். அந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 1 எம்டி.பி திட்டத்திற்கு மக்கள் இன்னும் வட்டி செலுத்துகிறோம்.
ஆனால் இப்பொழுது பிரதமரால் முன்னெடுக்கப்பட்ட சாரா உதவி திட்டத்தில் பிரிம் உதவி பெற்ற பரம ஏழைகளுக்கு 2400 ரிங்கிடாக உயர்த்தி வழங்கப் படுவதுடன், மாதந்தோறும் 100 ரிங்கிட் உதவி தொகையுடன் 1200 வெள்ளிக்கான உதவித்தொகை பலருக்கு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் அரசாங்கம் அறிவித்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் 100 வெள்ளி வழங்கும் திட்டம், நாட்டின் வளம் மக்களுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டின் ஒரு முன் உதாரணமாக கொள்ள வேண்டாமா?
மக்கள் மீது தனியாக எந்த வரியும் விதிக்காமல் இந்த ‘‘சார உதவி திட்டத்தை’’ அன்வார் அரசாங்கம் முன் எடுத்துள்ளதை பாராட்ட ஏன் எவருக்கும் மனமில்லை. வெறும் 33 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி மக்களுக்கு இவ்வளவு செய்துள்ள பிரதமர் இன்னும் எஞ்சிய காலத்திற்கும் பதிவியில் தொடர்ந்தால் நாடு நிறைய பயனடையும்.
இதனால் இந்தியர்கள் தொடர்ந்து பிரதமர் அன்வார் கைகளை பலப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சிலங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் , மத்திய அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.