கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - நாட்டில் சுமார் 10,800 நோயாளிகள் குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல், இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையுடையவர்கள் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் வரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 5.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்தார்.
அனைத்துலக உறுப்பு தான மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பதிவேட்டின் கடந்தாண்டு தரவுகள் உயிரிழப்புக்கு பிறகு உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளாதாக காட்டுகிறது.
அதாவது, பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 46 சம்பவங்கள் அல்லது 1.33 நன்கொடையாளர்கள் மட்டும் உறுப்பு தானம் செய்ய முன்வந்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.
"சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டின் உடல் உறுப்பு தானத்திற்கான பதிவு குறைவாகவே உள்ளது. 2024-ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு 1.33 நன்கொடையாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்," என்றார் அவர்.
உடல் உறுப்பு தானம் செய்வதற்கு விண்ணப்பித்தவர்கள் இறந்த பின்னர், அவர்களின் குடும்பத்தாரோ அல்லது வாரிசுகளோ அந்நடவடிக்கைக்கு தடையாக இருப்பதே உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கு முதன்மைக் காரணம் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த 1997 முதல் இவ்வாண்டு ஜூலை வரையிலான பதிவுகளின் அடிப்படையில், இதுவரையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உறுதியளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு மைசெஜாத்தெரா செயலியின் வழி, உடல் உறுப்பு தானம் செய்வதற்கு புதிதாக 16,000க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்துள்ளதாக அவர் கூறினார்.
பெர்னாமா