ஷா ஆலம், ஆக. 14 - சிலாங்கூர் மாநில இந்து அர்ச்சகர் சங்கத்தின் 23வது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ பாப்பாராய்டு தலைமை தாங்கினார்.
சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மாநிலத்தில் இந்து மத அமைப்புகளின் பங்கை மேம்படுத்துவதிலும் முக்கியமான தளமாக அர்ச்சகர் சங்கம் விளங்குவதாக அவர் தமது உரையில் கூறினார்.
இந்து சமய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கட்டிக்காப்பதில் அர்ச்சகர் சங்கம் ஆற்றிவரும் பங்கினை தாம் பெரிதும் பாராட்டுவதாகப் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அர்ச்சகர் தொழிலில் அந்நிய நாட்டினரை அதிகம் சார்ந்திருப்பதை தவிர்க்க உள்நாட்டினருக்கு அர்ச்சகர் பயிற்சிகளை வழங்கும்படியும் அவர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார்.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சமய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 10,000 வெள்ளி மானியம் வழங்குவதாகப் பாப்பாராய்டு அறிவித்தார். எனினும், இவ்வாண்டிற்கான மானிய ஒதுக்கீடு முடிந்து விட்டதால் அடுத்தாண்டு மானியத்தில் இந்நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அர்ச்சகர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான மையத்தை அமைப்பதற்கு நிலம் கோரி சங்கம் விடுத்த பரிந்துரையையும் பரிசீலிப்பதாக அவர் சொன்னார்.
மாநில அரச்சகர் சங்கத்தின் தலைவர் குணா குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் இந்து அர்ச்சகர் சங்கக் கூட்டம்- பாப்பாராய்டு தொடக்கி வைத்தார்
14 ஆகஸ்ட் 2025, 8:26 AM