ஷா ஆலம், ஆக. 13 - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசின் 2025ஆம் ஆண்டிற்கான 50 லட்சம் வெள்ளி மானியம் பகிர்ந்தளிக்கப்பட்டது. மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்த நிதியை பள்ளி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்ப்பள்ளிகள் தவிர்த்து சீன மற்றும் சமயப் பள்ளிகள் உள்ளிட்டமொத்தம் 873 கல்விக் கூடங்களுக்கு மொத்தம் 2 கோடியே 66 லட்சத்து 24ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இதனிடையே, தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் குறித்து பேசிய மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, இந்த நிதி பகிர்ந்தளிப்பு முறையில் கடந்தாண்டு மறுசீரமைப்பு மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதன் முறையாக அமல்படுத்தப்பட்ட இந்த மறுசீரமைப்பின் கீழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி மேலாளர் வாரியங்களுக்கு மானியத் தொகை சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வழங்கப்படும் 50 விழுக்காட்டு மானியம் திவேட் எனப்படும் தொழில்திறன் மற்றும் தொழில்கல்வி, ஸ்டெம் உள்ளிட்ட கல்வித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
அதே சமயம் பள்ளி மேலாளர் வாரியங்களுக்கு வழங்கப்படும் நிதி பள்ளி சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என பாப்பாராய்டு நினைவுறுத்தினார்.
இந்த புதிய அணுகு முறை பள்ளியின் கல்விச் சூழலை வலுப்படுத்தி போட்டியிடும் ஆற்றல் கொண்ட இளம் தலைமுறையினரை உருவாக்க உதவும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் இந்த மானியம் மூலம் சிலாங்கூரில் உள்ள பள்ளிகள் தொடர்ந்து வளர்ச்சி காணவும் உகந்த சூழலும் உயரிய தரமும் கொண்ட கல்வி மையங்களாக விளங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.